பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

77


அதற்காகத் தனியாகவே இருக்க வேண்டும் என்பது நமது வாதமல்ல.

காலையில் தூங்கி விழித்தவுடனே, மற்றவர்களைப் பற்றி யோசிக்காது. நாம் இன்று செய்ய வேண்டியது என்ன என்று யோசித்துத் திட்டமிடுகிற சிந்தனை வேண்டாமா! அது தான் தனி சிந்தனை.

நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டு நடந்து கொள்கிறவர்கள் தாம் சோம்பலின்றி, திகைப்பின்றி, சுறுசுறுப்பாகக் காரியமாற்றிக் கொண்டும், அதனை முடித்த திருப்தியில் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள்.

நாம் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடாதவர்கள், அவர்களுக்கு அவர்களே எதிரிகளாகி விடுகின்றார்கள். ஏனென்றால், திட்டமிடாத வாழ்க்கை சுற்றுச் சுவர் இல்லாத வீடாகப் போகின்றது.

திட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை தீட்டுவதுதான் சாமர்த்தியமாகும்.

வானொலி, தொலைக்காட்சி போன்ற நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். அங்கு பணியாற்றும் தயாரிப்பாளர்கள். தாங்கள் அடுத்த மாதத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, அதற்கான வழிமுறைகளைக் கடைப் பிடித்து, வேண்டிய யாவையும் செய்து தயாராகிக் கொண்டு விடுவார்கள்.