பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அலட்சியம், பிறகு பாதிக்கப்பட்ட உடலைப் பார்த்துப் பார்த்து, புலம்பி, பெருமூச்செறிந்து, பங்கப்பட்டு அங்கம் குன்றி நிற்பதால் பயனென்ன வரும்?

இளமை இருக்கவா போகிறது? அதற்கென்ன அப்படி ஒரு கட்டுப்பாடு என்று அலட்டிக் கொள்வோர் அதிகம்.

போகிற இளமையை யாரால் நிறுத்த முடியும். என்று நம்பிக்கையற்றுப் பேசுவோரும் அதிகம்.

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தீல்’ என்ற பழமொழிபோல, ‘தேகமும் தேடிக் காப்போர் இடத்திலே தான் தேமதுர வாழ்வைத்தரும்’ என்று நாம் சொல்கிறோம்.

இளமையை சீக்கிரம் முதுமை வந்து மூடாமல், நிறுத்தி வைக்கலாம். பிறகு முதுமையிலும் இளமையாக வாழலாம் என்பது தான் நமது வாதமே தவிர, முதுமை வராமலே செய்துவிட முடியும் என்பது அல்ல.

இளமைக் காலத்திலிருந்தே, பல இனிய வழிகளை இதமான முறைகளை மேற்கொண்டு கடைபிடித்து ஒழுகினால், தேகமும் தேர்ச்சி பெறும், மலர்ச்சியுறும் என்பதைத்தான் நமது முன்னோர்கள் நமக்கு வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றனர்.

தேகத்தைச் சுத்தமாக வைத்துக் காப்பதால், நமக்குக் குறையொன்றும் வராது. அதற்காக சிறிது நேரம் எடுத்துக் கொள்வதும் குற்றமுமல்ல.

இலட்சிய வாழ்க்கையை வாழ, இனியவாழ்க்கை வாழ நலமான உடல் வேண்டும். அந்த உடலுக்குள் தான் இளமை என்றும் பெருமையுடன் வீற்றிருந்து அரசபரிபாலனம் செய்கிறது.