பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

கின்றனர். அதற்காகப் 'படிப்பே பாவம் தரும் செயல்' என்று எல்லோரும் ஒதுக்கிவிடுவதில்லையே. முரட்டுத் தனத்திற்கும் முட்டாள் மனத்திற்கும் பயிற்சி காரணமல்ல. பழக்க வழக்க தோஷமே தவிர, பயிற்சியே காரணம் என்று மாற்றாந்தாய் பாணியிலே குறை கூறக் கூடாது.

பயிற்சியின் நோக்கமே உடலைச் செம்மைப்படுத்துவது, உறுப்புக்களை சீராக்குவது, மனதை செழுமைப் படுத்துவது, உடலை நேராக்குவது நிறையாக்குவதுதான். எப்படி என்று சிறிது விளக்குவோம்.

உடலைப் பயிற்சியுடன் இயக்கும்போது, அதிக சுவாச முறையை மேற்கொள்ளுகின்றோம். அதிகமாக உட்கொண்ட உயிர்க் காற்றை. நுரையீரல் நிறைவோடு ஏற்று நிரப்பிக் கொள்கிறது. உயிர்க் காற்றுக்காக ஏங்கிக் கொண்டிருந்த செல்களுக்காக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் காற்றினை ஏந்திக் கொண்டு விரைகின்றன. அதனால் இரத்த ஓட்டம் விரைகிறது. இரத்த ஒட்டம் விரைவு பெறுகிறது. செல்கள் செழிப்படைகின்றன. இரத்தம் தேவைக்கேற்ப கிடைப்பதால், உறுப்புக்கள் உற்சாகமாக வளர்கின்றன. வலிமை பெறுகின்றன. வீணான கழிவுப் பொருள்கள் விரைவாக வெளியேற்றப்படுவதால் உடல் சீராக இயங்குகிறது.

உடலில் உயிர்க் காற்றை அதிகப்படுத்தவும், இரத்த ஒட்டத்தை விரைவு படுத்தவும், இதயத்தின் ஆற்றலை மிகுதிப்படுத்தவும், உழைத்த நேரம் போக ஓய்வெடுக்கச் செய்யவும் உடற் பயிற்சி உதவுகிறது. காலத்தின் கோலம் உடலில் ஏறும்போது, உடல் தளருமே, அதனைச் சரி செய்யவும், இளமையில் தேகம் எழில் பெறுமே, அதற்கு ஏற்றமும் ஊட்டமும் கொடுக்கவுமே உடற்பயிற்சி உறுதுணையாக வருகிறது.