பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அறிவாளிகள் எல்லோருமே; அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. காரணம் என்ன? அவர்கள் கொண்டிருக்கும் அறிவை, சமுதாயத் தொண்டிற்காக சமர்ப்பிப்பதில்லை. தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று தனித்துப் போய்விடுகிற அவர்களை, மக்கள் மதிக்கிறார்கள். ஆனால் மனதிலே அமர்த்திக் கொள்வதில்லை. மக்களுக்கு செய்கிற சேவையால்; சமுதாயத்துக்கு செய்கிற தொண்டால், அன்பான அணுகுமுறையால், ஆதரவு தரும் காரியங்களால், மக்கள் மனதிலே ஒருசில அறிவாளிகள் இடம்பிடித்து அமர்ந்து கொள்கிறார்கள். மக்கள் மனதிலே அமர்ந்து, நீங்காமல் நிலைத்துப் போகின்ற நிலையைத்தான் அமர்நிலை என்றும், அதனால் அவர் அமரர் என்றும் போற்றப்படுகிறார். இந்நாளில் அமரர் என்ற வார்த்தை, இறந்துபோனவரைக் குறிக்கின்ற சொல்லாக ஆகிவிட்டது. இப்போது, அமரர் என்றால் இறந்தவர் என்றும் தவறாகப் பேசும் வழக்காகிவிட்டது. வாசனை என்று குறிக்கும் நாற்றம் என்ற சொல், கெட்ட வாசனையைக் குறிக்கும் வார்த்தையாகப் போனது போல அமரர் என்று சொல்லும் ஆகிவிட்டது. இறந்த ஒருவரின் குடும்பத்தார் அவரை மனதில் வைத்து நினைத்துக் கொண்டிருப்பதால் தான் அமரர் ஆகிவிட்டார் என்று பேசுகிறார்கள். இந்த அமரர் நிலைக்கும் மேலாக, தேவர் என்று இருக்கிறது.