பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

17


போகின்றன. பார்வையின் ஆற்றல் குறைகிறது. தூரப்பார்வை திட்டப்பார்வை என்று விரிந்து கண்களை சுருக்கிக் கொண்டு பார்க்க வைக்கின்றது. கழுத்திலே சுருக்கங்கள் களையாக மண்டிக் கிடக்கின்றன.

கைநரம்புகள் புடைத்தெழுந்து வரிக்கோலம் போடுகின்றன. முதுகிலே கூன் பரப்பு மிகுதியாகிக் குனியச் செய்யும் தோற்றம் விளைவிக்கிறது. கால் நடை தளர்கிறது. நடையிலே அடி எடுத்து வைக்கும் தூரம் குறைந்து குறு அடி குறு நடையாக மாறுகிறது. தாடைகள் விரிவடைகின்றன. முகப்பொலிவு மாற்றம் பெறுகிறது.

மேனியிலே மினு மினுப்பு குறைந்து, தோலிலே வரட்சி நீர் காணாத நிலப்பரப்பு போன்று இலேசான கீறல்கள். தலையில் வழுக்கை! முடி உதிராமல் இருந்தால் அலைநுரை போன்ற நரை குரலிலே நடுக்கம்.

நடையிலே தளர்ச்சி போலவே, உள்ளத்திலும் ஒருவித வெறுமை உணர்வு. இதுபோல எத்தனையோ மாற்றம்.

இப்படித்தான் முதுமை இருக்கும் என்று நாம் அறிகிறோம். ஆனால் எந்த வயதில் முதுமை நம் மீது ஏறிக் கொள்கிறது? இருபதிலா, முப்பதிலா? எழுபதிலா? யாராலும் சொல்ல முடியவில்லையே!

மேலே கூறிய எல்லாமே வந்தால் தான் முதுமையா? அல்லது ஒன்றிரண்டு வந்து சேர்ந்துவிட்டாலே முதுமை என்று சொல்லி விடலாமா?

நாற்பது வயதுக்குள் நரை வந்து விடுகிறது. முகத்திலே சுருக்கங்கள் விழுந்து விடுகின்றன. சிலருக்கு இருபது வயதிற்குள்ளேயே முடி விழுந்து தலை வழுக்கையாகிப்