பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



69

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


31. விளையாட்டு வழங்கிய வீரம்!

விம்பிள்டன் எனும் இடத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியானது, உலகப் பிரசித்திப்பெற்றதோர் போட்டியாகும். அதிலே வெற்றி பெறுகின்றவர், மாபெரும் பரிசுத் தொகையினை பெறுவதுடன், வரலாற்றிலே உன்னதமான புகழையும் பொறித்துக் கொண்டு விடுவார்கள்.

அந்தப் போட்டியிலே பங்குபெற விரும்பினாள் ஒரு மங்கை, மங்கையல்ல. மணமானவள், ஒரு குழந்தைக்கும் தாயானவள், வயதோ 28. எத்தனை தடை அவளுக்குப் பார்த்தீர்களா!

முடிவெடுத்து விட்டாள் அந்தத் தாய். 1980ம் ஆண்டு நடைபெற இருக்கும் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டேதீரவேண்டும் என்று தீர்மானித்து விட்டாள். ஏற்கனவே ஒருமுறை விம்பிள்டன் போட்டியில் வெற்றி வீராங்கனையாக வந்தவள்தானே!

இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள் பயிற்சி செய்து திறமைகளை புதுப்பித்துக் கொள்ளலாம். பலப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணத் தொடங்கியபொழுது. துக்ககரமான செய்தி ஒன்று வந்து அவளை துளைத்தெடுக்கத் தொடங்கியது.

ஒருமுறை இம்மங்கையின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள். இவள் இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்று கூறிவிட்டார்கள். லிக்கேமியா (Leukemia) எனும் 'வியாதியா எனக்கு என்று அந்த மங்கை அயர்ந்தே போனாள். இரத்தத்தில் புற்றுநோய் வியாதி என்றால், அவள் வாழ்கின்ற வாழ்நாட்கள் எண்ணிக்கையில் தானே அமையும்! சொல்லொணாத் துயரம் அவள் வாழ்க்கையில் புகுந்தாலும், அந்தமங்கை தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் கைவிடவில்லை. தளர்ந்து போய்விடவுமில்லை.