பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இயற்கையாகவே நமது உடலில் வரும் வளர்ச்சியையும், அது நம் மேல் கொள்கின்ற ஆதிக்கத்தையும் நாம் அனுசரித்துக் கொண்டே போக வேண்டும்.

வயதாகிக் கொண்டு வருவதைக் கண்டு ஆத்திரப்படுவதும் ஆதங்கம் கொள்வதும் அநாவசியமான முயற்சியே தவிர, அது அறிவார்ந்த போராட்டமாக அமையாது அந்த வளர்ச்சியின் முதுமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

நோய்கள் தரும் முதுமை

ஆனால் சந்தர்ப்பங்கள் சரியில்லாமலும், எதிர் பார்க்காத நேரத்திலும் நோய்கள் வந்து நெருக்கிக் கொண்டு நம்மை நசுக்குவதும் உண்டு. இத்தகைய நோய்கள் தான் உடலுறுப்புக்களை நோகச் செய்து, நொறுங்கச் செய்து, நசுங்கச் செய்து நேர்த்தியான உடலமைப்பினையும் நிறைவான தோற்றத்தினையும், நிலைகுலையச் செய்து விடுகின்றன.

இப்படி ஏற்படுகின்ற நோய்களை நாம் தடுத்து விடலாம். இதனால் ஏற்படுகின்ற முதுமைக் கோலங்கள் நம்மில் விளையாமல் விலக்கி விடலாம். இதனை முன்னெச்சரிக்கையான வாழ்க்கை, நல்ல பழக்கங்கள், நலமான சத்துணவு, நிம்மதியான உறக்கம் போன்ற முறைகளால் மாற்றி விடலாம்.

ஆகவே, நோய்களால் வரும் முதுமையை மாற்ற முயல்வது போலவே, இயற்கையாக வரும் முதுமையையும் நாம் வெற்றி கொள்ள முடியும். எப்படி?

அதாவது முதுமையில் இளமை என்பதாக

வயது உயர்ந்து கொண்டே போகட்டுமே? முதுமை தொடர்ந்து கொண்டே வரட்டுமே? மயக்கம் என்ன?