பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற போட்டிஅது. ஆஸ்திரேலியா ஆடிமுடித்துவிட்டு,பந்தெறியும் வாய்ப்பில் இருந்தது. இங்கிலாந்து 85 ஓட்டங்கள் எடுத்தால், வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தது.

இங்கிலாந்தே வெற்றி பெறவேண்டும் என்றுவிரும்பாத இங்கிலாந்து ரசிகர்கள் இருப்பார்களோ? எல்லோருடைய நினைவிலும் தங்கள் தாயகமே வெற்றி பெறவேண்டும் என்று தணியாத ஆவலில், தணல் மேல் உட்கார்ந்திருப்பவர்கள் போல ரசிகர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் பிரார்த்தனையை ஆண்டவன் கேட்கவில்லையோ என்னவோ! 60 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 பேர் பலியாகி, ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறி வந்துவிட்டனர். இன்னும் 5 விக்கெட்டுகள்தான் மீதி இருக்கின்றன என்று கொஞ்சம் மனம் தளர்ந்த நிலையிலும் தைரியப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, மடமடஎன்று மற்ற நான்கு விக்கெட்டுகளும் வீழ்ந்துபோயின.

இங்கிலாந்து குழுவில் இருப்பது ஒரே ஒரு விக்கெட்டுதான். வெற்றி பெறுவதற்காக ஓடி எடுக்க வேண்டிய ஓட்டங்களோ இன்னும் 10 இருந்தன. திக் திக் என்று இதயம் துரிதகதியில் அடித்துக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் என்னநடக்குமோ என்று எண்ணி மயங்கும்போது, ஒரு ரசிகர், இங்கிலாந்தே வெல்லவேண்டும் என்று எண்ணி எண்ணி மருகிய ரசிகர். பாவம் வேகமாக அடித்துக்கொண்டும் துடித்துகொண்டும் ஓடிய இதயத்தினை அதிர்ச்சிக்கு மேலும் ஆளாக்கிக் கொண்டார்.

அதனால் என்ன நடந்தது என்று எண்ணுகின்றீர்கள்! அதிர்ச்சிக்கு ஆளான அந்த ரசிகர் அதே இடத்தில் மாரடைப்பால் இறந்து போனார்!