பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பெண்ணாக ஆகிவிட்ட பெண்கள் வரை, இதுவரை பெற்றிடாத பெரு மயக்கத்தில் மயங்கி நிற்கின்றபோது, குறவஞ்சிக் கவிஞர், தனது கதையின் நாயகியை அறிமுகப் படுத்துகின்றார்.

வசந்தவல்லி பந்தடிக்கின்றாள். அந்தப் பந்து துள்ளும் நிலைக்கேற்ப பாடலின் சந்தம் ஒலிக்கின்றது. வசந்த வல்லியின் மார்பகமிரண்டைப் பந்தாக்கி, குதிகால் இரண்டையும் சேர்த்து மேலும் இரண்டு பந்தாக்கி, கையிலுள்ள பந்தையும் அவள் ஐந்து பந்து ஆடிக் கொண்டிருக்கிறாள் என்கிறார். என்ன கற்பனை நயம் !

பந்தாடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் பவனி வருகின்றார் பரமன்: பார்வை விழுகிறது. பாசம் எழுகிறது . ஆசை தொடர்கிறது. ஆனந்தம் உயர்கிறது. இவ்வாறு கதை வளர்கிறது.

இவ்வாறு கவிஞர்கள் காண்கின்ற கவின்மிகு காட்சியில், பெண்கள் ஆடிய பந்தாட்டம் எவ்வாறெல்லாம் இடம் பெற்று இருக்கின்றது என்பதை நாம் அறியும்போது, நம்மையும் அறியாமலேயே நமது நெஞ்சம் நிறைந்த இன்பங் காண்கிறது.

பந்து துள்ளி விழுகின்ற காட்சி, துள்ளி எழுகின்ற காட்சி இவற்றைவிட, பாவையர்கள் துள்ளிக்குதித்த அழகின் காட்சியைத்தான் கவிஞர்கள் சொற்களிலே வடித்துக் காட்டியிருக்கின்றனர். அக்காலத்திலிருந்தே அலைபாயும் நெஞ்சத்திற்கு அமைதி காணவும், அழுது வடியும் பொழுது போக்கி ஆனந்தம் தேடவும், இளவயது பெண்கள் எல்லோரும் ஒருங்கேகூடி இன்பம் கொள்ளவும், வளமையும் மென்மையும் நிரம்பிய மேனியைக் கட்டாகவும் செட்டாகவும் வைத்துக் காப்பாற்றவும் பெண்கள் பந்தாட்டத்தைப் பெரிதும் விரும்பினர். போற்றினர். ஏற்று மகிழ்ந்தனர்.