பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

92



நேரங்களில் விலங்குகளாய் மாறி வீணாக்கிய வரலாறும் உண்டு.

1907ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் உள்ள லார்டு மைதானத்தில், மிடில் செக்ஸ் குழுவிற்கும், லங்காஷயர் குழுவிற்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல்நாள் ஆட்டம் தொடங்கிய சில மணிநேரத்திற்குள்ளாக மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் நின்றது. மழை நின்ற பிறகு, ஆட்டத்தைத் தொடர முயன்றார்கள். ஆனால், பந்தாடும் பரப்பு நன்றாக இல்லை என்று, லங்காஷயர் குழுவின் தலைவன் ஆட மறுத்து விட்டதன் காரணமாகவே, குழப்பம் ஏற்படத் துவங்கியது.

ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடவேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்தனர். கூச்சலிட்டனர். அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாததால், பந்தயத் திடலுக்குள் பாய்ந்து ஓடினர். பந்தடித்தாடும் தரையைப் பார்க்கப் போனது மட்டுமின்றி, அதில் பலபேர் ஒரே சமயத்தில் வெறியுடன் அலைந்தனர்.

அவர்களை அப்புறப்படுத்துவதே சிரமமான காரியமாக ஆயிற்று. கடைசியில் போலீஸ் வந்துதான் அவர்களைக் கலைத்துவிரட்டியது அவர்கள் வெறியால்பந்தடித்தாடும் தரை பாழாய்ப் போயிற்று. பிறகெப்படி ஆட்டம் தொடரும் குரங்கு கை கிடைத்த பூமாலைபோல, அவர்கள் காலிலே பட்ட பந்தடித்தாடும் தரை வீணாய் போயிற்று.

ஆர்வம் அளவோடு இருந்தால், அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பதாக மாறும். அதுவே மாறி வெறியாகிப் போனால், எப்படி போகும் என்பதற்கு இரண்டாவதாக விளக்கிய நிகழ்ச்சியே சான்றாக அமைந்திருக்கிறது பார்த்தீர்களா!