பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



79

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நோயுள்ளவள் விளையாட்டுப் பயிற்சியை எங்கே செய்யமுடியும்? வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். பயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்தாலும் தைரியம் இழக்காத நிலையில், இரவும் பகலும் தன் நினைவுகளிலேயே லயித்துப்போயிருந்தாள் அந்தமங்கை.

இன்னும் இரண்டு வாரங்கள்தான் விம்பிள்டன் போட்டி நடைபெற இருக்கின்றது என்ற நிலையில், மீண்டும் ஓர் அதிர்ச்சியான செய்தி அவளுக்கு வந்தது. ஆமாம்! இரத்த அணுக்களில் லிக்கேமியா நோய் போன்ற அறிகுறிகள் முதலில் தென்பட்டன. ஆனால், அறிகுறிதானே தவிர உண்மையல்ல என்று டாக்டர்கள் தீர்மானமாகத் தெரிவித்து விட்டார்கள்.

நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த நோய்ப் பயம் தொலைந்துவிட்டது. ஆனால் நேரம் இல்லையே பயிற்சி செய்ய! மரண அவஸ்தை என்பார்களே, அதிலிருந்து விடுபட்டு வந்த வீரமங்கை, மீண்டும் விம்பிள்டன் சென்று போட்டியிட்டாக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

தன் கணவனுடனும், குழந்தையுடனும் விம்பிள்டன் நோக்கிச் சென்றாள். விம்பிள்டன் போட்டியில் கலந்து கொண்டாள். வென்றாள். டென்னிஸ் ராணி எனும் அற்புதப் பட்டத்தையும் ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் பரிசாகப் பெற்றாள்.

நோய் என்றதும், நொந்து போய், நைந்து போய், மனநோயினாலேயே மயங்கிக் கலங்கும் மனித குலத்திற்கு இலக்கணமாக இல்லாமல், வீரம் மிகுந்த வீராங்கனையாக, வருவது வரட்டும் என்று எதிர்பார்த்து, எதிர்த்து, மனநிம்மதியுடன் வாழ்ந்து, மாபெரும் சாதனை செய்த வீராங்கனையார் தெரியுமா? இவான் சுலகாங்கெளலி என்பது தான் அவள் பெயர்.