பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



75

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


30. எதிரியானாலும் மனிதன் தான்!

எதிர்த்துப் போட்டியிடுவதன் காரணமாக மற்றவரை எதிரி என்கிறோம், விளையாட்டுலகின் நோக்கமும் போட்டியிடுவதுதானே! ஆனால், வீரர்கள் பலர் தங்களை எதிர்த்துப்போரிடுபவர்களை கடுமையான பகைவர்களாகவே எண்ணிப் போரிடும் இழிநிலைமைக்கும் இறங்கிப் போய் விடுகின்றனர்.

நேர்வழியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், வெற்றி பெற்றால் விழுமிய புகழை அடையவும் முயல்வது வீரனுக்குரிய கடமை. அதுதான் ஆற்றல்மிகு மனிதனுக்குரிய பெருமையுமாகும்.

இங்கே ஒரு பண்பாளனை சந்திக்க இருக்கிறோம். தன்னை எதிர்க்க இருந்த ஒருவீரனை, எதிரியாக, பகைவனாக அவன் நினைக்கவில்லை. ஒரு ஆற்றல் உள்ள மனிதனாகவே நினைத்தான். அதனால் வான்புகழ் அடைந்தான். எப்படி! படியுங்கள்!

1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் எனும் இடத்தில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. அதில் 400 மீட்டர் (Hurdles) தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்காக, உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இருவர் வந்திருந்தனர். ஒரு வீரன் இங்கிலாந்து நாட்டினன். பெயர் லார்டுடேவிட்டர்கிலி. 1928ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரன்.

மற்றொரு வீரன் அமெரிக்க நாட்டினன். பெயர் மோர்கன் டெயிலர். இவன் 1924ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற வீரன்.