பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



தனக்கென்று செலவு செய்ய, தன்கையில் கொஞ்சம் பணமிருக்கிறது என்று எண்ணும்பொழுது, மனைவிக்கு ஒருவித உரிமைப் பற்றும், மனத்தெம்பும், செழிப்பும் உண்டாகும்.

தன் தோழிகள் மத்தியிலும் கம்பீரமாக நடைபோடக் கூடிய ஒருவித சக்தியும் இருக்கும்.

இல்லையேல்,'சோற்றுக்காக உழைக்கும் ஒரு வேலைக் காரி; கணவனுக்கு தேவைப்படும் பொழுது இச்சையைத் தீர்க்க இருக்கும் தாலி கட்டிய ஒரு தாசி என்ற நிலைமைக்கு மனைவியைத் தூண்டிவிடும் ஒரு விபரீத புத்தியைத் தந்துவிடும்.

எனவே, மனைவியின் மணமறிந்து பண விஷயத்தில், பக்குவமாக நடந்துகொண்டால், கணவனுக்கு கவலைகள் வர நியாயமில்லை.

இன்னும் சொல்லப் போனால், பண விஷயத்தில் கொஞ்சம் மனைவிக்கு அதிகமாகவே உரிமை வந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கச்செய்து, குடும்பத்தையும் நடத்திச் செல்லும் உரிமையையும் கொடுத்துவிட்டால் , கணவனுக்குரிய குடும்பச்சுமை பாதி இறங்கினாற் போலவும் இருக்கும்.

பெண்கள், எதையும் சமாளிக்கும் சக்தி படைத்தவர்கள். ஆகவே சுமுகமாகவே குடும்பத்தை நடத்திச் செல்லும் சாகசச் கலை அவர்களுக்கு இருக்கிறபடியால், நம்பிக்கையுடன், குடும்பத்தை நடத்தும் பொறுப்பை மனைவியிடம் விடும் கணவன், மகிழ்ச்சியாகவே வாழமுடியும் என்பது என் அனுபவம், என் நண்பர்களைப் பார்த்தும் அறிந்து கொண்ட பாடம் என்றார் உலகநாதர்.