பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாயிரம் வருடச் சிறப்பு உடையது தமிழ் இலக்கியம் என்று பண்டிதர்களும் தமிழாசிரியர்களும் அறிஞர்களும் காலம் காலமாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது நேரிய முறையில், குறைகளையும் நலன்களையும் அளவிட்டுச் சொல்லும் விமர்சனம் தமிழில் இல்லை. அதனாலேயே காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியைத் தமிழ் மொழி பெற்று வளம் அடையாது இருந்து வருகிறது.

பழம் தமிழ் இலக்கியங்களுக்கு விரிவுரையும் பொருளும் எழுதி வைத்த உரையாசிரியர்கள் இடை இடையே சிற்சில நயங்களைச் சுட்டியிருக்கிறார்கள். அவை விமர்சனங்கள் தான்; தமிழில் விமர்சனமே இல்லை என்று சொல்வது தவறு என்று கூறுகிறவர்களும் உண்டு.

உரையாசிரியர்கள் எழுதி வைத்திருப்பதை விமர்சனம் என்று கொள்வது சரியாகாது, அவை எல்லாம் பொருள் கூறி நயம் எடுத்துரைத்த செயலே தவிர, ஆய்ந்து குறைகளையும் சிறப்புகளையும் சுட்டிக் காட்டும் விமர்சனம் ஆகா.

கால ஓட்டத்தில், திருக்குறள் பற்றியும், கம்ப ராமாயணம் பற்றியும், மற்றும் சங்க கால இலக்கியங்கள் பழம் பாடல்கள் பற்றியும் அதிகம் அதிகமாகவே விரிவுரைகள், விளக்க உரைகள், கட்டுரைகள் எழுதப் பட்டிருக்கின்றன. இப்பவும் எழுதப்படுகின்றன. இவை எல்லாம் வியந்து போற்றும் பாராட்டுரைகள் தானே தவிர நேரிய விமர்சனங்கள் இல்லை.

வாசகர்களும் விமர்சகர்களும் 136