பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 77 கண்டிப்பானவள். வீட்டு வேலைக்காரர்கள் சிறு தவறு செய்து விட்டாலும் அவர்களை மன்னிக்கத்துணியாதவள். அவர்களுடைய தவறின் தன்மை அவர்கள் மனசில் உறைக்கும்படி ஏசியும், தண்டித்தும் நேர்மையை நிலை நாட்டத் தயங்காதவள்.

அவளுடைய இளகிய மனசை அறிந்தவர்கள் இக்குணங்களை எல்லாம் "பாராட்ட வேண்டிய அம்சங்கள்" என்ற கணக்கில் தான் சேர்த்தார்கள். -

இவ்வாறு பாராட்டுப் பெற்ற பண்புகள் சில சமயங்களில் ஏற்படுத்திய விளைவுகள் பாராட்டியவர்களின் மனதில் எத்தகைய எண்ணங்களையும் எழுப்பவில்லை போலும் -

ஒரு நாள் பார்வதி அம்மாள் "பெரிய வீட்டு மீனாட்சி"யைக் காணச் சென்றிருந்தாள். அப்போது அந்த வீட்டில் கூப்பாடும் அழுகையுமாக இருந்தது. வீட்டு வேலைக்காரச் சிறுமியை அதன் அப்பன் அறைந்து கொண்டிருந்தான். முதுகில் "பளார் பளார்" என்று பேயறை கொடுத்தான் அவன். எட்டு வயதுச் சிறுமி, "ஐயோ.அம்மா. நான் இல்லே. எனக்குத் தெரியாது சாமி சத்தியமாக நான் எடுக்கலே" என்று அலறியது. விக்கலுக்கும் விம்மலுக்கும் ஒலத்துக்கும் ஊடாக எழுந்த அலறல் மிகவும் பரிதாபகரமாக ஒலித்தது.

அந்த இடத்தில்தான் மீனாட்சி அம்மாளும் நின்றாள். சிறுமியின் வேதனைக்குரல் அவள் உள்ளத்தைத் தொட முடியாமலா போய்விட்டது? " என்ன விஷயம்?" என்று விசாரித்தாள் பார்வதி.

மீனாட்சியின் இரண்டரை வயதுக் குழந்தை கையில் நாலணாக் காசு இருந்ததாம். அது காணாமல் போய்விட்டதாம். குழந்தையைக் கவனித்து கொண்டிருந்த சிறுமிதான் திருடியிருக்கவேண்டும் அது ஐஸ்க்கிரீம் வாங்கித் தின்றது: ரிப்பன்காரனிடம் பேசிக் கொண் டிருந்தது என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் சொன்னாள். தோட்டத்தில் வேலைபார்த்து வந்தான் சிறுமியின் தந்தை. அவனிடம் தனது கட்சியைச் சொல்லி, "திருட்டுப் பிள்ளையை இங்கே வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாது. கூட்டிக்கொண்டு நீயும் போய்ச்சேரு அதுதான் தண்டனை என அறிவித்தாள்.

அவன் கெஞ்சினான். மன்னிப்புக் கேட்டான். தனது மகளை அறைந்து நொருக்கினான்.