பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் பாயாசத்தை விரும்பிக் குடித்தார்கள். தாராளமாகப் பாராட்டினார்கள். அவசரம் எதுவும் இல்லாமல் நிதானமாகவே சாப்பிட்டு முடித்தார்கள்.

இதற்குள் ஒரு அரை மணி நேரம் பறந்து போய்விட்டது.

அரைமணி நேரத்திற்குள் ஊரிலே உலகத்திலே என்னென்னவோ நடந்திருக்கக் கூடும்-எங்கும் எதுவேண்டு மானாலும் நடக்க முடியும்-என்பது சாவித்திரிக்குத் தெரியாத விஷயமில்லை. என்றாலும், இப்படி ஒரு காரியம் நிகழ்ந்துவிடும் என்று அவள் சொப்பனத்திலேகூட நினைத்திருக்க முடியாது. தனது பத்தினித் தன்மையின் மின்சக்தி அப்பாவிப் பூனையைக் கொல்லும் ஆற்றலுடையதுதான் என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு வரவில்லை! பூனை சாகட்டும் என்று அவள் தீவிரமாக எண்ணினாள். வாஸ்தவம், பூனை தோட்டத்திலே செத்துக் கிடந்தது. அதுவும் மறுக்க முடியாத உண்மையேயாகும். அவள் மகிழ்ச்சி அடைய வேண்டியது தானே நியாயம்? ஆனால், பாருங்கள். இந்த உல்கத்தில் மகிழ்ச்சி-மன நிறைவு-திருப்தி என்பதெல்லாம் யாருக்கும் சுலபத்தில் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சாவித்திரியும் மனிதப் பிராணிகளின் பிரதிநிதிதானே! -

அவள் மறுபடியும் திடுக்கிட்டாள். "ஐயோ! என்று இரண்டாவது தடவையாக அலறத் தவித்தவள் அதை அட்க்கிக் கொண்டாள்.

விருந்தினர் வெற்றிலை போட்டுக் கொள்வதற்காக, சுண்ணாம்பு எடுத்துப்போக அந்தப் பக்கம் வந்தவள் அவள். அவளுடைய பார்வையில் அந்தக் காட்சி உறுத்தியது. தோட்டத்தில், ஒரு செடியின் அருகில் பூனை கிடந்தது. செத்துக் கிடந்தது. சாவித்திரி அருகில் சென்று நன்றாக ஆராய்ந்து "பூனை செத்தேவிட்டது" என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்திக் கொண்டாள். -

அது செத்து நாசமாகட்டும் என்று மனசாறச் சபித்த சாவித்திரியின் நெஞ்சு இப்போது "பக்-பக்" என்று அடித்துக் கொண்டது. அவள் உள்ளம் கலவரம் அடைந்தது. அவள் வயிற்றை எதுவோ என்னவோ செய்வது போலிருந்தது. "கடன்காரப் பூனை அது இருந்தும் கெடுத்தது. செத்தும் கெடுத்தது என்பது சரியாயிருக்கு. எனக்கு ஏன்தான் இதெல்லாம் வரனுமோ? என்று வருத்தப்பட்டாள் அவள். பாயசத்தைப் பருகியதனால்தான் அந்தப் பூனை செத்துவிட்டது. இதில் சந்தேகமே கிடையாது. இல்லையென்றால்,