பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

“அதைப் போலவே, மக்களைப் பெற்றுப் பேணி வளர்ப்பது மட்டுமே பெற்றவள் கடனாம்; பிறந்த மகன் பெரியவனாயதும், வாளோடு களம் சென்று, களிறுகள் பலவற்றை வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுவதே அவன் பெருங்கடனாம். இருவர்க்குரிய இக் கடமைகளை உணர்ந்தவள் யான் புலி போன்ற ஊக்கமும் உரனும் உடையவன் என் மகன்; ஆகவே, தன் ஆண்மையினைத் தோற்றுவிக்குமாறு அமர்மேற் சென்றுவிட்டான்; அந்த வாழ்வையே நானும் விரும்பினேன்; அவன் தன் கடமை மறந்து, எப்போதும் என் அண்மையிலேயே இருக்க வேண்டும் என்று ஆசை கொள்வேனல்லள்; அவ்வாறு ஆசை கொள்ளுதல் அறமுமாகாது. அவனைப் பெற்றவளும் யானே: அவனைப் பெற்றதும் இவ்வயிறே; ஆயினும், அவன் வளரும் வரை, இடம் அளித்துக் காக்கும் கடமையல்லது வேறு உரிமை எமக்கு இல்லை. ஆகவே,பிறந்த அவன் பெரியவனாகும்வரை ஈண்டு இருந்தான்; கடமையுணரும் காளையாயினபின் அக்கடன் மேற்கொண்டு களம் புகுந்துவிட்டான்: ஆகவே, அவனைக் காண வேண்டுமாயின், அக் களம் சென்றே காணுதல் வேண்டும்” என்று பெருமிதம் தோன்றக் கூறினாள்.

ஈன்று புறந்தருதலோடு தன் கடன் முடிந்தது; அவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பும் அந்நிலையே அற்றுவிட்டது; ஆகவே, அவன் களம் புகுந்து களிறு எறிந்து பெயர்ந்து கடனாற்றும் காளையாதல் கண்டு களித்தல் அல்லது, அவன் எப்போதும் தன்னோடே இருத்தல் வேண்டும் என விரும்புவது தக்கதன்று எனக் கருதும் மறக்குடி வந்த இம்மகளின் உள்ளம் உணர்ந்த ஒரு