பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தமிழில் “நீ” என்னும் மொழிக்கு சீன பாஷையில் “நீ” என்றும், “நான்” என்பதற்கு “ஞான்” என்றும், “யாம்” என்பதற்கு “யாம்” என்றும், “பெண்” என்பதற்குப் “பெண்” என்றும், “எஃகு” என்பதற்குக் “கண்” என்றும், “ஈர்” அல்லது “இரண்டு” என்பதற்கு “ஈர்” என்றும், “மை” என்பதற்கு “மை” என்றும் வழங்கிவரும் தொந்த மொழிகளால் அறிவதும் அன்றி மகத நாட்டைச் சார்ந்த ஜீனமலை சைன மலையருகில் சைனர்கள் என்னும் பெளத்தர்களும் தமிழர்கள் என்னும் பெளத்தர்களும் பூர்வத்தில் ஓர் குலத்தினராக விளங்கினார் என்பதும் புலப்படுகிறது (அலாய்சியஸ் II 78).

பெளத்தமும் சமணமும் ஒன்றென்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் முன் வைப்பார்.

ஓர் மகதநாட்டுச்சக்கரவர்த்தியே புத்தரென்றும் ஜைநரென்றும் அழைக்கப்பெற்ற படியால் தற்கால ஜைநர் என்போருள் சக்கரவர்த்தி என்னும் பெயரை வழங்கி வருகிறார்கள். கொடுந்தமிழ் வாசிகளாம் மலையாளிகள் புத்தரை நாயன், நாயனார் என்று வழங்கி வந்தது கொண்டு திருவனந்தபுரத்தைச் சார்ந்த வள்ளுவர் நாடென்னும் பதியில் வாழும் வள்ளுவர்கள் குப்புலிங்க நாயனார் என்றும் மார்க்கலிங்க நாயனாரென்றும் வழங்கி வருவது போல் ஜைனருக்குள்ளும் பாகுவலி நாயனார், தீர்த்தங்கர நாயனார், ஜெயசீல நாயனார் என வழங்கி வருகிறார்கள் (அலாய்சியஸ் II 442).

தமிழ்மொழி வரலாற்றைச் சொல்லும்போதும், புத்த சமயக் கோட்பாடுகளை விளக்கும்போதும் திருமூலருக்குத் தனியிடம் அளிக்கத் தாசர் தயங்குவது இல்லை. திருமந்திரத்தில் அவர் ஆழங்கால் பட்டவரென்பதை அவர் தரும் மேற்கோள்களால் அறியலாம். சிவனே வடமொழியையும் தென்மொழியையும் படைத்தான் எனும் தொன்மத்திற்கு எதிராக ஒரு தொன்மம் படைக்கும் தாசர் வடமொழியும் தென்மொழியும் புத்தரால் உண்டாக்கப்பட்டவையென்றும் அவரே வடமொழியைப் பாணினி, ஜனகர் முதலானோரிடமும் தென்மொழியை அகத்தியர், திருமூலர் முதலானோரிடமும் ஈந்து பரப்பினார் என்றும் கூறுவார். இதற்கு ஆதாரங்களாக முன்கலை திவாகரத்திலிருந்து “வடநூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன் கவியரங்கேற்றும் உபயக் கவிப்புலவன்” என்ற அடிகளும் வீரசோழியத்திலிருந்து “இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல் வாய்ப்ப” என்னும் அடியும் முன் வைக்கப்படும். புத்த தன்மத்தை மேலும் மேலும் பரப்ப வேண்டி, ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி ஆகியோருக்கு வடமொழியையும் அகஸ்தியருக்குத் தென்மொழியையும் கற்பித்து ஜனகரை மகத நாட்டிற்கு வடபுறத்தும் அகஸ்தியரைத்