பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மெய்யன்பு

கோடிமயிற் கூட்டத்திலே

குஞ்சுமயில் தாயைத்

தேடிகண் டுவப்பதைப்போல்

தேடி கண்டாய் என்னை !

ஓடிவரும் குற்றாலத்தேன்

ஒளிப்புனலின் கூத்தில்

ஆடி மகிழ்ந்தினிப் பதைப்போல்

அணைத்துக்கொண்டேன் உன்னை!

உயர்ந்துயந்து வானுலாவி

இசைக்கும் வானம்பாடி

முயற்சி இன்றி கூடெய்தல் போல்

மொய்த்தெனையே என்னை !

நயமிகுந்த கலையுணர்வு

நல்குசங்கப் பாடல்

பயன் தெரிந்த சுவைஞனைப்போல்

படித்துணர்ந்தேன் உன்னை !

கண்ணிறைந்த மலர்கள் பல

கயத்திருந்த போதும்

வெண்டாமரைகொள் கலைமகள் போல்

விரும்பி கொண்டாய் என்னை !

விண்கதிர்கள் பலவிருக்க

வேண்டிடாது ஞாயிற்

றொண்கதிர்க்கே மகிழ்மரைபோல்

உவந்து கொண்டேன் உன்னை!