பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

31


மிருந்து காக்கும் திறனையும் இயற்கையாகப் பிறவியிலேயே பெறுகிறான்; வயதால் அன்று. வி. 5:18

குரங்குப் படைகள், இராமனுடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு வந்தன. இராமன் அவற்றிற்கு நகரமாந்தர்க்கு உரிய ஆடை அணிகளைத் தந்து அலங்காரம் செய்வித்தான். முடிசூட்டும் ஊர்வலத்தில் குரங்குகள் யானைகளின் மேல் நகரத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டன.

குரங்குகள் யானை ஏறி அறியா; எனினும், மலைகளில் ஏறிப் பழகியன. ஆகையால் தாம் மலைகளின் மேல் செல்வதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தன. ஏன்? யானைகளின் உயரமும் பருமனும் மலைகளை ஒத்தன; அவை பொழியும் மதநீர் மலை வீழ் அருவிகளை ஒத்தது.

குரங்குகள் தம் இயற்கைச் சூழ்நிலையில் இருப்பனவாக எண்ணின. ர. 13:74

பாம்பை ஒருவன் மிதித்து விடுகிறான்; உடனே பாம்பு அவனைக் கடிக்கிறது. ஏன்? அவன் குருதியைக் குடித்துத் தன் பசியையோ தாகத்தையோ தீர்த்துக்கொள்ளுவதற்காக அன்று; அவனால் பட்ட தாக்கத்தைப் பொறுக்காது தன் பழியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே.

இராவணன் சீதையை வஞ்சனையால் கவர்ந்தான்; அது இராமன் வில்லின் ஆற்றற்கு மாசு இதை இராமன் தான் பட்ட அவமானமாகவே கருதினான். தனக்கு உண்டான பழியை மீட்கும் பொருட்டுப் படைகளைக் கூட்டி, கடலைத் தூர்த்து, இராவணனைக் குலத்தோடும் களைந்தானே அன்றி, சீதையை மீட்டு அவளுடன் மறுவாழ்வு தொடங்க வேண்டும் என்பதற்காக அன்று. இராவண அழிப்பே இராமனுடைய குறிக்கோள்.

முதலை நீரில் காந்து உறையும்; கரையில் கல்லோடு கல்லாகப் படுத்திருக்கும்; தன்னைக் காட்டிக் கொள்ளாது; முதலை உள்ள நீர்நிலை தெளிந்திருக்கும்.

அஜனுக்குத் தீங்கு இழைக்கக் கருதிய அரசர் அவனிடம் வலிய வந்து திருமணப் பரிசுகள். தந்தனர்; மகிழ்ச்சிக்குறி காட்டித் தம் கருத்தை மறைத்தனர்; தெளிந்த மடுவில் முதலைகளைப்போல மறைந்திருந்தனர். ர. 7:30