பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா

11


திரு. தியாகராசச் செட்டியார் தொடர்பு

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் ஆவார். தியாகராசச் செட்டியார் அவர்கள் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர். பரந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியர்கள் போலவே இவர் அந்தக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்தார். அவர் ஒரு நாள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அனுமதி பெற்றுச் சாமிநாத ஐயர் அவர்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய்த் தாம் பார்த்துவந்த பதவியை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். 1880ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாமிநாத ஐயர் குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்ற தமிழ்க் கல்வியும், அறிவாற்றலும், பாடம் சொல்லும் திறமையும், சாமிநாத ஐயர் அவர்களைக் குறுகிய காலத்திலேயே மாணவரிடத்திலும் பேராசிரியப் பெருமக்களிடத்திலும் ஒருங்கே நற்புகழ் பெறத் துணை செய்தன.

பதிப்புப் பணி

இக்காலத்தில் கும்பகோணத்தில் மாவட்ட முனிசீபாக இருந்த சேலம் இராமசாமி முதலியார் தொடர்பு சாமிநாத ஐயருக்கு வாய்த்தது. முதலியார் அவர்கள் நிறைந்த தமிழ்ப் பற்றாளர்; புலமை நெஞ்சம் வாய்ந்தவர். எனவே சீவகசிந்தாமணியைச் சாமிநாதஐயரிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். பின் அந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று வேண்டினார். அதுவரை சிந்தாமணி ஒரு