பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சான்றோர் தமிழ்

ஆசிரியர் அழைத்த காரணத்தால் அன்றிலிருந்து சாமிநாத ஐயர் என்றே அழைக்கப் பெற்று வந்தார். பெற்றோர் வழங்கிய பெயர் நிலைக்காமல் ஆசிரியர் இட்ட பெயரே பின்னர் நிலைத்து விட்டது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், அவரிடம் நூல்களைப் பாடங்கேற்பதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக அந்நாளில் விளங்கிவந்த சுப்பிரமணிய தேசிகரோடும், அந்த மடத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழ்ப் புலவர்களுடனும், வடமொழி வாணரோடும். சங்கீத வித்துவானோடும் நெருங்கிப் பழகி உரையாடுவதும் சாமிநாத ஐயர் அவர்களுடைய அந்நாளைய செயல்களாக விளங்கின.

ஆசிரியர் மறைவும் மாணவர் பரிவும்

1876ஆம் ஆண்டு பிரப்வரித் திங்களில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் காலமானார்கள். ‘19ஆம் நூற்றாண்டின் கம்பன்’ என்று பாராட்டப் பெற்ற பிள்ளை அவர்கள், நாள் ஒன்றுக்கு 300 பாடல்கள் பாடினார் என்பர். இவர் 19 தலபுராணங்களும், 10 பிள்ளைத் தமிழ் நூல்களும், 4 மாலைகளும், 16 அந்தாதிகளும் பாடினார். இவருடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பலராலும் பாராட்டப் பெறுவது. இத்தகு கல்விப் புலமை நிறைந்த ஆசிரியர் காலமானதால் சாமிநாத ஐயர் பெரிதும் வருந்தினார். ஆசிரியருடைய கல்விப் பரப்பு. பாடம் சொல்லும் திறம், பண்பு நலம், செய்யுள் இயற்றும் புலமை முதலியவற்றையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் சொல்லி மகிழ்ந்தார். எனவே, ஆசிரியர் மறைவுக்குச் பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணியதேசிகரிடம் இவர் பாடம் கேட்டுக் கொண்டே ஆதீனத்துக்கு வந்த மாணாக்கர்களுக்குத் தாம் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.