பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்கள் தாம் குழல் இனிது என்றும் யாழ் இனிது என்றும் சொல்வார்கள்!” என்பது பொய்யாமொழி உண்மைதான். “சிறு கை அளாவிய கூழ்” என்று பிறிதோரிடத்தில் பாடுகிறார் தெய்வப்புலவர். கூழின் சிறப்பைப் பேசும் இடத்தில், பச்சை மண்ணின் பிஞ்சுக்கரம் தீண்டிய கூழ் சுவை மிக்கது என்று உரைத்து, அதற்கு அனுசரணையாகக் குழந்தையை உணர்த்தி, கூழையும் உணர்த்தி, அதன் வாயிலாக, குழந்தையையும் கூழையும் உயர்த்திப் பேசுகின்றார். உவமை நயம்தான் கவிக்கு உயிர் முத்திரை இடுகிறது.

ஆங்கிலக் கவி வேர்ட்ஸ்வொர்த்தைப் பற்றி (Wordsworth) நீங்கள் விரிவாகக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். “Child is the miniature of man” என்று எழுதுகிறார். “மனிதனின் நுண்ணிய வடிவமே குழந்தை” என்பது அவர்தம் கருத்து. “இன்றையக் குழந்தைகளே நாட்டின் நாளையத் தலைவர்கள்,” என்று நேருஜியை உள்ளிட்ட அரும்பெருந் தலைவர்கள் அன்றாடம் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்கள்!

சுற்றம் என்னும் ஒட்டுறவைத் தொடங்கி வைக்கும் முதற் புள்ளி குழந்தை. உறவும் சுற்றமும் இல்லையேல், அப்பால், வாழ்விற்குப் பொருள் ஏது? சுற்றமிழந்தோனின் பொருளுக்குப் பயன் ஏது? இந்தக் குறளை மீண்டும் படிக்கின்றீர்களா?

6