பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகனே!
மலையிடைப் பிறவா மணியே! என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!
யாழிடைப் பிறவா இசையே! என்கோ
தாழிருங் கூந்தல் தையல்! நின்னை"

என்று நாள்தோறும் பாராட்டுவான் ஆயினன்.

கண்ணகி, தன் மாளிகை தேடிவந்த இல்லறத் தார்க்கும் துறவறத்தார்க்கும் இன்முகம் காட்டி விருந்தூட்டி உபசரித்து வந்தாள். அதனால் எல்லோரும் அவளது இல்லறப் பண்பைப் பாராட்டி வாழ்த்துவார் ஆயினர்.


4. மாதவி நடனம்

இசை–நடனம் நாடகம்

காவிரிப்பூம்பட்டினத்தில் நாடக அரங்கம் நடன அரங்கம், இசை அரங்கம் எனப் பலவகை அரங்கங்கள் இருந்தன. அவற்றில் அடிக்கடி நாடகங்கள், நடன வகைகள், இசைவிருந்து என்பன நடைபெற்று வந்தன. பூம்புகார் நகரம் சோழ நாட்டின் தலைநகரம் ஆதலால் அங்கு நாடகம் முதலிய இன்பக் கலைகளில் வல்லவர் பலர் நிலையாக வாழ்ந்து வந்தனர். இந்த இன்பக் கலைகளில் ஈடுபட்டிருந்தவர் ‘நாடகக் கணிகையர்’ எனப்பட்டனர். அவர்கள் ஓர் ஆடவரை மணந்து கொள்வதும் உண்டு; மணந்து கொள்ளாமல் தனி வாழ்க்கை நடத்துதலும உண்டு. அம்மகளிர்க்கு நாடகம் கற்பிக்க நடன ஆசிரியர் பலர் இருந்தனர்