பக்கம்:வாழும் வழி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

53


கொள்ளுதலே பயிற்சி பெறுதலே கல்வியாகும்” . என்பது இக்காலக் கல்விக் கொள்கையின் முற்ற முடிந்த துணியாகும். இதைத்தான் வள்ளுகூர் ‘கற்க ... நிற்க’ என அறிவிக்கின்றார். கற்பது எதற்காக? நிற்பதற்காகத்தான்! கற்றுவிட்டோமே என்பதற்காக நிற்பதில்லை. கல்வியின் நோக்கமே நிற்பதுதான் நிற்றல் என்பது வாழவேண்டிய முறைப்படி வாழ்வதுதான். வாழ்வதற்கு வழிகாட்டுவதுதானே கல்வி அதனால்தான் “கற்க ... நிற்க” என்றார் ஆசிரியர்.

‘புரட்சியகராதி’ என்னும் பெயரில் ஓர் அகராதி தொகுக்கும்படி எனக்கு ஆணையிட்டால், கற்றல் என்றால் நிற்றல் என்றே கூட நான் பொருள் எழுதி வைத்துவிடுவேன்.இதற்கு நிகண்டு போன்ற மேற்கோள் சான்றாக இந்தக் குறளையே எடுத்துக் காட்டிவிடுவேன். பின்னே என்ன? படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல் எத்தனையோ பேர் தருக்கித் தடுமாறித் திரிகிறார்களே, அவர்களைப் படித்தவர்கள் என்று எவ்வாறு அழைப்பது? இந்தக் கறிக்கு உதவாத பள்ளிக் கணக்கர்களையும் என்னென்பது! அதனால்தான், அண்ணல் காந்தியடிகள் கூட, வாழ்க்கைக்குப் பயன்படும்படியான வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியைப் பயிற்றுங்கள் என்று அறிவுரை தந்தார்கள். அவர்களது முறையினை நாம் ‘ஆதாரக் கல்வி’ (Basic Education) என்றழைக்கிறோம். இதைத்தான் வள்ளுவப் பெருமானார், கற்று நிற்க - நிற்கக் கற்க என்று அப்போதே அறிவித்துப் போந்தார். இனி இக்குறளின் சொல்நயங்கட்குச் செல்வோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/55&oldid=1105679" இலிருந்து மீள்விக்கப்பட்டது