பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பின்னணியாகக் கொண்டு இயற்றுவன். இலக்கியம் அது தோன்றும் கால நிலையைத் தன் அடிப்படையாகக் கொண்டெழும் என்பது உண்மை. அதுவே இலக்கியப் பண்பும் ஆம். ஆனால் அவ்வாறு இலக்கிய அடிப்படையாக அமையும் மக்கள் வாழ்க்கை நிலை, என்றும் நடுநிலையில் இருப்பதில்லை. அது காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். நாடுதோறும் மாறிக்கொண்டே இருக்கும். இனந்தோறும் மாறிக் கொண்டே இருக்கும். இன்று தோன்றி விளங்கும் இலக்கியங்கள் அனைத்தையும் நோக்கின், அவை பல்வேறு வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது புலனாம்.

நாகரிகம் வளர, வளர நாட்டு மக்களிடையே புதுப் புதுப் பொருள்கள் இடம் பெறுவதும், அப் புதுப் பொருள்களைக் குறிக்க வழங்கும் புதுப் புதுச் சொற்கள், அம் மக்கள் மொழியில் இடம் பெறுவதும் நிகழும். மேலும் காலம் செல்லச் செல்ல, மக்களின் தேவை பழகப் பழகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் பல்வேறு மொழி வழங்கும் மக்களும், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களும், பல்வேறு பழக்க வழக்கங்களையுடைய மக்களும் ஒன்று கலந்து வாழ்வதும், அம் மக்களின் பழக்க வழக்கங்களும், அம் மக்களின் மொழிகளைச் சேர்ந்த சொற்களும், அம் மக்களின் சமயக் கொள்கைகளும் ஒன்றில் ஒன்று கலந்து போவதும், அவ்வாறு கலந்த அக் கலவைக் காட்சிகள், ஒவ்வொருவர் இலக்கியத்திலும் இடம் பெறுவதும் இயல்பாம்; அதைத் தடை செய்தல் இயலாது. வேண்டுமானால், அப் பொருள்களையும், அப் பொருள்களைக்