பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

எடுத்துரைக்க வல்ல சொல் வளமும், கேட்போர் விரும்பிக் கேட்குமாறு அமைந்த சொல்லின்பமும் உடையவாய் அமைந்த ஒரு மொழியில், அழகிய இலக்கியங்கள் பல தோன்றுவதும் இயல்பே. இலக்கியமாவது, உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களால் திறம்பட உரைப்பதாம் இனிய பல சொற்களைக் கொண்ட ஒரு மொழி, நாகரிகமும் நற்பண்பும் இல்லா நாட்டு மக்களிடத்தில் தோன்றி விடுவதில்லை. தக்க இன்ன, தகாதன இன்ன என உணரும் உணர்வு தகுதியுடையவரிடத்து மட்டுமே உண்டாம், தகுதியாவது யாது என்பதை உணராதார், ஒலியிலும் மொழியிலும் தகுதியைக் காண மாட்டுவாரல்லர். சிந்தையும் செயலும் சிறந்தனவாகப் பெற்ற மக்கள், தம்மோடு தொடர்புடைய எவையும் சிறந்தனவாக இருத்தலே விரும்புவர்; தாம் வழங்கும் மொழியும் சிறந்தனவாதல் வேண்டும் என்ற எண்ணம் அவர்பாலே உண்டாம். ஆகவே, ஒரு மொழியும், அம்மொழியில் தோன்றிய இலக்கியமும் சிறந்தனவாயின், அம்மொழி வழங்கும் மக்கள், அதாவது, அவ்விலக்கியத்தால் உணரப்படும் மக்கள், சிறந்த செயலும், சீரிய பண்பும் வாய்ந்தவராவர் என்பது உறுதி.

“ உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்றார் பாரதியார். உள்ளம் தூயதாயின், சொல்லும் தூயதாம்; செயலும் தூயதாம்: உள்ளம் தூயார், தூய்மையின் நீங்கிய சொல் வழங்கலும், தூய்மையின் நீங்கிய செயல் புரிதலும் செய்யார் தீய - சொல்லும், தீய செயலும் உடையாரின் உள்ளம் மட்டும் - தூயதாதல் இயல்பன்று சொல்லும் செயலும் உள்ளத்தை