பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. தமிழ்நடை வளர்த்த
தமிழ்த் தென்றல்

வாழ்வும் பயனும்

இன்றைய சமுதாயம் எண்ணற்ற தலைமுறையினரின் உழைப்பில் மலர்ந்ததாகும். காலந்தோறும் வளர்ச்சியை உருவாக்க முன்னோடிகளாகச் சிலர் தோன்றுகின்றனர். வருங்காலச் சமுதாயத்தினர் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும், எளிமைப்படுத்திக் கொள்வதற்கும், கருத்து வடிவத்திலும், செயல் வடிவத்திலும் அத்தகையோர் தொண்டாற்றி வருகின்றனர். தன்னலம் கருதாத தொண்டையே தங்கள் வாழ்க்கையின் பயன் என்று கருதுகின் றனர். ‘சமுதாயப் பணியே வாழ்வின் குறிக்கோள்’ எனக் கருதிப் பணியாற்றுவோர் மிகச் சிலர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் இலக்கியத்தையும், அரசியலையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் நாட்டுணர்வுடன் இணைத்து இழைத்துப் பார்த்த வித்தகர் திரு. வி. க மொழிக் கண்ணோட்டத்திலிருந்து உரைக்கும் போது ஒரு திருப்பு மையத்தையும், அரசியல் பார்வையிலிருந்து அணுகும்போது சமய உணர்வுடன் கலந்த விடுதலை எழுச்சியையும், பொருளாதாரக் கோணத்திலிருந்து குறிப்பிடும்போது முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும் கொண்ட எளிமை, மறுமலர்ச்சி, காந்திய தெறி ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர் எனலாம்.