பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சான்றோர் தமிழ்



“பகைவரென ஒருவருமே இல்லாப் பண்பு
பாலித்த கவிமணியார், நமது பிள்ளை
முகைகளெல்லாம் நலம்பெருகி மலரப் பாட்டு
மொழிந்திருந்தது இக்காலம் நமது, காலம்!”

என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் அரும்பெரும் நூல்கள் பல உண்டு; கன்னித் தமிழ் ஆட்சிமொழியாய் மாட்சியுற்றிருந்த காலத்தே எழுந்த இலக்கியங்களில் பல இற்றைச் சிறுவர்க்கு எளிதில் விளங்குவதேயில்லை. ஆத்திசூடியும். கொன்றைவேந்தனும் அன்றையக் குழந்தைகட்கு எளிய இனிய நூல்கள். வேற்று மொழியின் ஆதிக்கத்தால் அத்தகைய தமிழறிவைப் பலர் இழந்துவிட்டனர். இந்நிலையில் குழந்தை இலக்கியம் இன்றியமையாததாயிற்று. அக்குறையை நீக்கிக் குழந்தைகள் உளங் குளிர்ந்து பாடுவதற்கு ஏற்ற எளிய கவிதைகள் பலவற்றைத் தந்தவர் கவிமணி [1] என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் கவிமணியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ‘கவிமணியின் பாடல்களிற் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மறித்துச் சுரக்கின்றன’ என்று கூறியுள்ளார். [2]

குழந்தை உள்ளம்

கவிமணி அவர்கள் குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். தம் வீட்டுச் சுவர்களில் குழந்தைகள்


  1. சுடர், கவிமணி மலர், பக்கம். 35.
  2. தமிழ்ச்சுடர் மணிகள்-ப. 423