பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சான்றோர் தமிழ்

வட்டமாய் உன் கழுத்திலே
வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா?
யான் அறியக் கூறம்மா!
பவழக் காரத் தெருவிலே
பவழங் காண வில்லையாம்
எவர் எடுத்துச் சென்றனர்?
எனக் கறிந்து சொல்வையோ!

இந்த இரண்டு பாடல்களிலும் கவிமணியின் சந்தநய இன்பத்தினை அறிந்து மகிழலாம். கூண்டுக் கிளியைப் பார்த்துச் சிறுவன் ஒருவன் தான் பாலைக் கொண்டு தந்தும், பழம் தின்னத் தந்தும் சோலைக்கு ஓடிப்போக ஏன் வழி பார்க்கிறாய் என்றும், கூட்டில் வாழும் வாழ்வினில் குறைகள் உண்டோ என்றும் கேட்கிறான். அதற்குக் கிளி மறுமொழியாகக் கூறும் பகுதி குழந்தையின் சிந்தனைச் செல்வத்தினையும், உயரிய கொள்கைப் பிடிப்பினையும் வளர்ப்பதாகும். அப்பகுதி வருமாறு :

சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ?

பாலும் எனக்குத் தேவையில்லை;
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவி நிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!

இது போன்றே பசுவைப் பார்த்துப் பாடும் பாலகன்,

பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப்
பால்தர, நீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
பகருவையோ பசுவே!