பக்கம்:மருதநில மங்கை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை55


நோக்கினாள். அவன் மார்பில் பூசிய சந்தனம், அப் பரத்தையர் அணிந்த மாலையாற் கலைந்து கவின் இழந்து தோன்றுவதைக் கண்டாள். அவன் ஆடையை நோக்கினாள். அது, பரத்தையரோடு அவன் ஆடிய துணங்கைக் கூத்தில் அவர் காற்சிலம்பில் சிக்குண்டு கரை கிழிந்து போயிருக்கக் கண்டாள். தான் செய்த தவறுகளைத் தன் தலைமாலையும், மார்பில் சந்தனமும், ஆடையின் கரையும் காட்டிக் கொடுப்பவும், ‘நான் தீதிலேன், மனத்தால் குற்றம் இலேன் !’ எனப் பொய் கூறி அடிபணிந்து நிற்கும் அவன் நெஞ்சத் துணிவைக் கண்டாள். கடுஞ் சினம் கொண்டாள்.

“அன்ப! நீ எதைச் செய்யினும், ‘உன் செயல் தவறுடைத்து! துயர் விளைவிக்கும் கொடுமை உடைத்து!’ எனக் கூறி உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்துவார் இல்லாத இடத்தில், உன் இன்ப விளையாட்டால் தன் நிறம் இழந்து கெட்ட உன் கண்ணி, பரத்தையர் மலர் மாலை பட்டு அழிந்து பாழான உன் மார்புச் சந்தனம், அவளோடு ஆடிய துணங்கைக் கூத்தில் கிழிந்து கந்தலான உன் ஆடை ஆகிய இவை, உனக்குப் பகையாய், உன் திருவிளையாடல்களை அம்பலப் படுத்தாத போது வேண்டுமானால், ‘நான் ஒழுக்கத்தால் தீதுடையேனல்லன்!’ என உரைத்தும், பணிந்தும் எம்மை மயக்குதல் பொருந்தும். ஆனால், அன்ப! அது இப்போது இயலாது. அவை உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்த வல்ல நல்ல சான்றுகளாயின. அவை, அதை உள்ளது உள்ளவாறே, உணர்த்தி விட்டன. இதற்கு மேலும் பொய் கூறி எம்மை ஏமாற்றுதல் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/57&oldid=1129488" இலிருந்து மீள்விக்கப்பட்டது