பக்கம்:மருதநில மங்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை59


பரத்தையரைக் கொணரும் அப் பணியை விடாது மேற்கொண்டான் அவன் தேர்ப்பாகன். தன்பால் உண்மை அன்பு காட்டும் மகளிர்பால் அன்பு காட்டான். மணந்த மனைவியையும் மறக்கும் அன்பிலி, அது மட்டுமன்று. தன் சொல்லை நம்பித், தன்னோடு உறவு கொள்ளும் மகளிரை மறந்து கைவிடும் கொடியோன், அஃது அறநெறியாகாது என எண்ணும் அறிவும் அவன்பால் இல்லை. இவ்வாறு அன்பை மறந்த, அறத்தைக் கைவிட்ட கொடியோன் அவன் என்பதை அறிந்தும், அவன்பால் பொருள் பெற்றுப் பிழைக்கும் பாணன் அவனைப் பாராட்டினான். பாணன் பாராட்ட, அவன் பரத்தையர் சேரியில் வாழ்ந்திருந்தான்.

கணவன்பால் தான் பெற வேண்டிய நலத்தைப் பரத்தையர் பெறுவது கண்டு கலங்கினாள் அவன் மனைவி. அவன்பால் பெறலாம் இன்பத்தை இழந்ததால் உண்டாம் வருத்தத்தினும், அவன் ஒழுக்கக் கேடு உணர்ந்து, ஊரார் உரைக்கும் பழியுரை கேட்டு அவள் உள்ளம் உற்ற துயர் பெரிதாம். அது பொறாது பெரிதும் வருந்தி வாழ்ந்திருந்தாள். வருந்தியிருப்பாள் முன் வந்து நின்றான் அவள் கணவன். அவனைக் கண்டவுடனே, அவள் கலக்கம் கொடிய கோபமாய் மாறிற்று.

“ஐய! நீ மிகவும் கொடியை, உன் தேர்ப்பாகன் தேர் ஏற்றிக் கொணரும் புதிய பரத்தையை நாட்காலையில் கூடிப், பகற்காலத்தே பரத்தையர் சேரி சென்று, அங்குப் பல பரத்தையரைக் கூடி, மாலைக் காலத்தில் உன் காதற் பரத்தையின் மனை சென்று வாழும் மாண்பிலான் நீ!” எனப் பழிக்கத் துணிந்தது அவள் உள்ளம். ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/61&oldid=1129496" இலிருந்து மீள்விக்கப்பட்டது