பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


காலத்தில் இறந்த பின்பே சிலை வைப்பு நிகழ்ந்தது என்ப தற்கு ஒரு சான்று வருமாறு :


முன்னொரு காலத்தில் அயோத்தி நகரைத் தலைநகராகக் கொண்டு கோசல நாட்டைத் தசரதன் என்னும் பேரரசன் ஆண்டான். அவனுக்கு, இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தனர். அரசியல் சூழ்நிலை காரணமாக இராமனும் இலக்குவனும் காட்டுக்குப் போய் விட்டனர். மன்னனுக்கு மூத்த பிள்ளை இராமன் மீது பற்று மிகுதி. அவனது பிரிவாற்றாமையால் தசரத மன்னன் இறந்து விட்டான். பரதன் என்னும் மகன் கேகய நாட்டிலிருந்து கோசல நாட்டுக்குத் திரும்பினான். தந்தை தசரதன் இறந்து போனது பரதனுக்குத் தெரியாது: பரதன் அரண்மனை வாயிலுக்குள் புகுந்து உள்ளே போய்க்கொண்டிருந்தபோது, வழியில் இருந்த ஒரு பகுதி அவன் கண்ணுக்குத் தென்பட்டது. முன்னர் இறந்து போன மன்னர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பகுதி தான் அது. அந்தப்பகுதியில் தந்தை தசரதனது சிலையும் வைக்கப்பட்டிருந்ததைப் பரதன் கண்டு திடுக்கிட்டான். தந்தை இறந்து விட்டார் போலும் என்று முதலில் ஐயுற்றான்.பின்னர் மற்றவரை வினவி உண்மையறிந்து அழுது அரற்றினான்.இது, ‘பாசகவி’ என்னும் கவிஞர் இயற்றிய பிரதிமா என்னும் சும்சுகிருத நாடகத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி.


இவ்வரலாற்றால், இறந்தவர்க்கே சிலை வைக்கும் வழக்கம் அக்காலத்தில் மரபாக இருந்தது என்பது புலனாகும். இவ்விருபதாம் நூற்றாண்டில், இறந்தவர்- இருப்பவர்-எல்லாருக்குமே சிலை வைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சிலைகளாக நிற்பவர்கட்குள்