பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர்

75

1947ஆம் ஆண்டில் ‘சேர வேந்தர் செய்யுட் கோவை’ என்ற நூலின் முதற் பகுதி வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இந்நூல் வெளிவந்தது. இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் ஆராய்ச்சி நூல் இது. இதை உருவாக்கும் பெருமை மு. இராகவையங்கார் அவர் களையே சாரும். இது சங்க காலச் சேர வேந்தர்களைப் பற்றிய தொகுப்பு நூல். பாடல் பெற்ற சேர வேந்தர், பாடிய சேரவேந்தர், சேரவேந்தர் கிளையினர், சேரவேந்தர் நாடு நகர் முதலியன, சேர மண்டலப் பகுதிகளை ஆண்ட பிற தலைவர்கள் என்ற ஐந்து பிரிவுகளாக இந்நூல் அமைந் துள்ளது.

1951ஆம் ஆண்டில் இந்நூலின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பெற்றது. இஃது இடைக்கால பிற்காலச் சேர வேந்தர்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு நூல். இதில் பாடல் பெற்ற சேரவேந்தர், பாடிய சேரவேந்தர், சேரநாடு, நகர் முதலியன, சேரர் வரலாறு என்னும் பிரிவுகள் அடங்கி யுள்ளன.

ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட இந்நூல் சேரர் தொடர்பான இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகளுக்குத் துணையாக அமைகின்றது.

1948ல் ‘செந்தமிழ் வளர்த்த தேவர்கள்’ என்ற பெயரிய நூல் தோற்றம் பெற்றது. இது கடந்த நூற்றாண்டில் தோன்றித் தமிழ் வளர்த்த சேது நாட்டுப் பெருமக்களின் வரலாற்றைக் கூறுகின்றது.

1950-ஆம் ஆண்டில் ‘Some Aspects of Kerala and Tamil Literature’ என்ற நூல் வெளிவந்தது. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடிவம் இந்நூல். தமிழில் ஆற்றிய உரையினை மொழி பெயர்த்து