பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


செல்வரான ஒருவரே, பின்னர்ப் பின்னர் அத்தகைய வாய்ப்புக் குறையக் குறைய வாணிகம் குன்றி ஏழையாகி விடுவதும் உண்டு. உலகியலில் பல துறைகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றைப் பார்க்கலாம்.


செல்வர்கட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து செல்வத்தைத் துய்க்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் நல்வினை செய்தவர்களாகப் பார்த்து இந்தச் செல்வர்கட்குப் பிள்ளைகளாக வந்து பிறந்தனர் என எந்தச் சான்று கொண்டு கூறமுடியும்? அது போலவே, ஏழைகட்கு யாராவது பிள்ளைகளாகப் பிறந்து ஏழ்மையை ஏற்கத்தான் செய்கின்றனர்; முற்பிறவியில் தீவினை செய்தவர்களே இங்கு வந்து பிறந்தனர் என்று எவ்வாறு கூற முடியும்? அவரவர் பிறந்த குடும்பச் சூழ்நிலையே அந்தந்த நிலைமைக்குக் காரணமாகும். இதற்கும் ஊழ்வினைக்கும் தொடர்பேயில்லை. ஊழ்வினை என ஒன்று இருந்தாலல்லவா தொடர்பு இருக்க முடியும்?


குடும்பச் சூழ்நிலையையடுத்து உடலமைப்புச் சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாம். நல்ல உடலமைப்பு பெற்றவர் நன்கு செயல்பட முடிகிறது. அல்லாதவர் நன்கு செயல்பட முடியவில்லை. உடல் ஊனமுற்றோர் குறைபாடு உடையவராய் வருந்துவதைக் காணலாம். நாம் பயிரிடுகிறோம்-மரம் செடி கொடிகள் வைத்து வளர்க்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உடையனவாய் அமைந்துவிடுகின்றன - சில கெட்டும் போகின்றன. நாம் பல கருவிகள் செய்கிறோம் - பல பொம்மைகள் செய்கிறோம்; அவற்றுள் சில, குறைபாடு உறுகின்றன சில கெட்டும் விடுகின்றன. அவ்வாறே பிறக்கும் பிள்ளைகளுள்ளும் சிலர் குறைபாடு உடையவராய் - உடல் ஊனமுடையவராய்ப் பிறந்து விடுகின்றனர். எனவே, குறை