பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

207

கொண்டு, மூத்த பேத்தியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு கன்னியப்பன்...அங்கே... துணுக்கென்று ஒரு குலுக்கல். யாரது? வெள்ளைச்சேலையில் சிறு சிவப்புக்கரை போட்ட சேலை புள்ளிப்போட்ட ரவிக்கை... முடி நரைத்து காது மூக்கு மூளியாக... ஆனால் மலர்ந்த முகத்துடன் சின்னம்மாவா அது?

செவந்தி தன் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுயலுகையில்,

"பேசும்மா பேசு” என்று சரோ மைக்கை சரி செய்வது போல் உசுப்புகிறாள்.

யாரையும் கூப்பிடாமல் பட்டென்று துவங்கி விடுகிறாள்.

“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. நான் ஆறாவது வரைதான் படிச்சேன். அதற்குப்பிறகு பொம்புள புள்ளக்கி படிப்பு எதுக்குன்னு நிறுத்திட்டாங்க. அப்பல்லாம் அப்படிதாங்க. இப்ப நா எங்க பொண்ணப் படிக்க வைக்கணும்னு படிக்க வச்சிட்டேங்க. அது காஞ்சிபுரம் போயி மூணு வருசம் இன்ஜினியர் படிச்சிருக்குங்க. அதுனாலதா ரொம்ப முன்னேற்றம்.” சரோ தலையில் கை வைத்துக் கொள்கிறாள்.

இவளுக்குச் சட்டென்று தான் தப்பு பண்ணுவதாகப் படுகிறது."தான்வா மேடம்தாங்க எங்களுக்கு மொத ஊக்கம். அவங்க வூடு தேடி வந்து சொல்லிக் கொடுத்தாங்க. பயிர் பண்ணப்புறமும் வந்து வந்து பார்த்தாங்க. அதுக்கு மின்ன இந்த யூரியாவ வேப்பம் பிண்ணாக்கில் கலந்து போடணும்னு தெரியாது. எங்கப்பா நெறய யூரியா வாங்கிப் போடுவாரு...” பேசிக் கொண்டே போகிறாள். உள்ளுணர்வு சரியாகப் பேசவில்லை என்று சொல்லுகிறது.

ஜனாபாய் மேடை மீதிருக்கும் மணியை அடிக்கிறாள்.

“சரிம்மா நல்லா பேசனிங்க” என்று சொல்லுகிறாள். கடைசியில் நினைவு வந்து விடுகிறது. “ஏதானும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிக்குங்க. வணக்கம்.”

சரோ வெளி வராந்தாவில் அழைத்து வந்து கடிந்து கொள்கிறாள்.