பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


கடவுள் சிலை செய்து வைத்த காலத்தைக் கண்டுபிடிக்கவியலாத மிகப் பழங் கோயில்களில் உள்ள கடவுள் சிலையைச் சுயம்பு’ என்று கூறிவிடுகின்றனர். சுயம்பு என்றால் தானாகத் தோன்றியது என்று பொருளாகும், சுயம்பு= தான்தோன்றி.

மலை வழிபாடு:

மற்றும், மக்கள் தமக்குப் பல பொருள்களைத் தரும் மலைகளிலும் தெய்வத் தன்மையைக் கண்டனர்; மலை மேலும் அடிவாரத்திலும் கோயில்கள் அமைத்தனர்; மலையைச்சுற்றி வந்து வழிபட்டனர்; மலைவலம் வருதலைக் கிரி பிரதட்சணம்’ என்னும் ஆரவாரமான சம்சுகிருதப் பெயரால் சுட்டினர். மலைக்கச் செய்யும் மலைக் கோயில்களின் மதிப்பு மலைபோலவே, உயர்ந்தது.

நீர் வழிபாடு:

தமக்கும் வயலுக்கும் நீர் தரும் ஆறுகளையும் தெய்வத் தன்மையுடையனவாகக் கருதி, கங்கை யம்மன், காவிரித்தாய் என்றெல்லாம் ஏற்றாற். போல் பெயர்கள் இட்டு மக்கள் வணங்கி வந்தனர்; ஆறுகளில் நீராடுவதைத் துாய செயலாகக் (புனிதமாகக்) கருதினர். ஆற்றங்கரைகளில் விழா எடுத்தனர். இந்தி, யர்கள் ஆறுகளைப் பெண் தெய்வமாக உருவகித்தனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒடும் பெரிய நீளமான நைல், (NILE) என்னும் ஆற்றை அங்குள்ள மக்கள் ஆண் தெய்வ மாகக் கருதி எங்கள் அப்பன் நீலன்’ என்பதுபோல் கூறி வழிபடுவார்களாம். மக்கள் ஆறுகளின் பெருமை கருதி ஆற்றங்கரைகளில் கோயில்கள் கட்டினர். இக் கோயில்கட்குப் பெருமை மிக உண்டு.