பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

181

இரண்டு மூன்று தரம் தான்வா மகளிர் கூட்டம் நடந்தது. பெரிய மேடம் வந்திருந்தார்.

சரோவின் கல்லூரியை எட்ட இருந்து ரங்கன் பஸ்ஸில் போகும்போது காட்டுகிறான்.

ஒரு புதிய பாதையில் அவர்கள் செல்கிறார்கள். இரண்டு தடவை பயிர் வைத்தாயிற்று. கொல்லை மேட்டில் போட்ட பயிரில் பட்டாளத்தாரின் கடனைக் கட்டி, மேல் பணமும் கையில் தங்கியிருக்கிறது. இனி மழைக்கு முன் வீட்டுக் கூரையைச் செப்பம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டில் முன்பு அண்ணன்கலியாணத்தின் போது, வைத்த பூமியையும் மீட்க வேண்டும். அதில் தென்னை இருக்கிறது. கிணறு பம்ப் எல்லாம் இருக்கின்றது. அதில் சாகுபடி செய்தால், அண்ணனுக்கு ஏதேனும் அனுப்பி வைக்கலாம். மூன்று வருசம் சரோ படிக்க, பையன் படிக்க செலவுகள் அதிகம்தான். இடையில் சரோவுக்கு ஏதேனும் நகைகள், பண்ட பாத்திரங்கள் வாங்கிச் சேமிக்க வேண்டாமா?

நிறுத்தத்தில் வந்து இறங்குகையில் ஊமை வெயில் எரிக்கிறது. நேராகக் கடைக்குப் போகிறார்கள். தாமரைப் பூக்கலரில், அரக்குக் கரையில் இரண்டிழை சரிகை போட்ட ஒரு சேலை எடுக்கிறார்கள். எண்ணுற்று ஐம்பது ரூபாய். அரக்கில் சரிகைக் கட்டம் போட்ட ரவிக்கை. அந்தக் குழந்தைக்கு ஒரு கவுன். நூற்றிருபது ரூபாய்...

“ஓட்டலுக்குப் போய், சாப்பிடலாம் வாங்க...” என்று கன்னியப்பன் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, வூட்ட சாப்பிட்டதே செரிக்கல. எதுக்கு ஒட்டல் இப்ப? பணத்த ஏன் விரயம் பண்ணுற?” என்று ரங்கன் மறுக்கிறான்.

“மொதலாளி, இன்னிக்கு நான் சொல்லுறத நீங்க தட்டக் கூடாது, நீங்க சாப்பிடணும்.”

“அட வூட்ட சோறாக்கி வச்சிருக்க. வீணாகும். எதானும் டிபன் சாப்பிடுவம் போதும்!”

“சரி அப்ப டிபன் சாப்புடலாம் வாங்க!”