பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


பாடல் ஒன்று அகநானூறு என்னும் நூலில் உள்ளது. அப்பாடலைப் பாடியவர் அம்மூவனார் என்பவர். அப் பாடலின் நடுகல் பற்றிய பகுதி வருமாறு :

[1] *

‘வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத் -
தோப்பிக் கள்ளொடு துருஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுகா றருஞ்சுரம்’

என்பது பாடல் (35) பகுதி கருத்து :- மறப்போர் செய்து மாண்டு மணல் குன்றின்மேல் நடுகல்லாய் நிற்கும் மறக் கடவுளை வழிபடுவதற்காக, அந்நடுகல்லின் மேல் மயில் பீலியை அழகாக அணிவித்து, துடி என் னும் பறையை முழக்கி, நெல்லிலிருந்து செய்யப்பெற்ற தோப்பி என்னும் கள்ளை வைத்து, செம்மறியாட்டைப் பலி கொடுத்துப் படையல் போடுவர்-என்பது கருத்து. நாட்டுக் கார்த்திகை நாளிலும் மாட்டுப் பொங்கல் நாளிலும், காத்தவராயன் படையல் என்னும் பெயரில் ஒரு தனியிடத்தில் மதுவும் ஆட்டுக்கறிச் சமையலும் வைத்துப் படையல் போடும் வழக்கம் இக்காலத்திலும் நடைபெறுகிறது என்னும் செய்தி முன்பே ஓரிடத்தில் விவரிக்கப்பெற்றுள்ளமை ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது, இப்பாடலில், நடுகல் மறவர், கடவுள்’ என்னும் பெயரா லேயே சுட்டப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. துடி கொட்டுதலும் தோப்பிக் கள்ளொடு துருப் பலிகொடுத் தலும் இப்பாடலால் பெறப்படும் புதிய செய்திகளாகும், குன்றின்மேல் கோயில் எழுந்த வரலாறுக்கும் இப்பாட லில் அடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  1. அகநானூறு-களிற்றி யானை நிரை-35.