பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கோடுகளும் கோலங்களும்

சின்னம்மா இருந்தப்ப, ஏரித் தண்ணி வந்து வெள்ளாமை கடலை கேவுறு போடுவாங்க. அவங்க பட்டணத்தோடு போயிட்டாங்க. அப்பாக்கு வயிசாயிடுச்சி, உழைக்க சிரமம். நாந்தா இப்ப இதுல மணிலா போடணும்னு தீவிரமா வந்திருக்கிறேன்.”

இவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கன்னியப்பன் வந்து விடுகிறான்.

“அக்கா, கூப்டனுப்பினிங்களாமே...?

“ஆமா... நா இங்கே இருப்பேன்னு ஆயா சொல்லிச்சா? நீ அறுப்புக்குப் போயிருக்கேன்னாங்க.. ?”

“இல்ல வைக்கோல் கொண்டாந்து போர் போட்ட. வேல முடிஞ்சிச்சி வாரேன். அக்கா இங்க பயிர்வைக்கப் போறிங்க? இதா, இவங்க கூட கேணி தோண்டுறாங்க. தண்ணி வந்திருக்கு போல...?”

"ஆ..” என்று சிரித்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொள்கிறார். அவள் அப்பனுக்கு மீசை கிடையாது. இவருக்கும் அப்பன் வயசு இருக்கலாம். ஆனால் தாட்டியாக, உயரமாக இருக்கிறார். காதோரம் மட்டுமே கம்பிகள் போல நரை இழைகள். கிருதாவும் வெளுப்பு. மற்ற இடங்கள் வழுக்கை. பார்த்தால் படித்து விவரம் அறிந்தவர் போல் இருக்கிறார். ஆனால் கூட நான்கு பேரை வைத்து வேலை வாங்காமல், இவரே வேலையாளுக்கு சமமாக மண்வாங்கிக் கொட்டுகிறார்.

“ஏம்மா, இவரு யாரு? தம்பியா?”

“தம்பி போலதா. ரொம்ப வேண்டியவரு. இவுரு ஒத்தாச இல்லன்னா நா ஒண்டியா வெள்ளாம செய்யிறது சிரமம். ஏங்க நா தரிசாக் கெடக்குற இந்த பூமில வெள்ளாம பண்ணனும்னு வாரப்ப நீங்க கேணி வெட்டிட்டிருக்கீங்க, நல்ல சவுனம். எனக்கும் தண்ணி குடுப்பீங்களா? தண்ணி எப்படி வந்திருக்கா?”

மீசைமுறுக்குவது இவர் வழக்கம் போல. ஏனோ சிரிப்பு வருகிறது. அவர் நகர்ந்து சென்று, “வா வந்து பாரு!" என்று