பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பாரதிதாசன்



தோழிமார் தாலாட்டு


தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே
அன்பே
நகைமுகத்தின் பெண்ணான நன்முத்தே
மானே.

தகையாளர் வையத்தில் தந்த
திருவே
தொகைபோட்டு வாங்கொண்ணாத் தூய் அமிழ்தே!
கண் வளராய்.

கன்னங் கரிய களாப்பழத்தின்
கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித்
தட்டிலிட்டே.

இன்னும் எமக்கே இனிப்பூட்டிக்
கொண்டிருந்தால்
பொன் “உறக்க நாடு” புலம்பாதோ
கண்மணியே!

தங்கத் திருமுகத்தின் தட்டினிலே
உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக்
கொண்டிருந்தால்

திங்கள் முகத்துன் சிரிப்போடு
தாம்கொஞ்ச
அங்“குறக்க நாட்டார்” அவா மறுத்தது
ஆகாதோ?