பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கோடுகளும் கோலங்களும்

“இது சொல்லப் போனா, என் பூமிதா. எம் பய்யனதா தங்கச்சி மகளுக்குக் குடுத்துப் படுவெட்டாப் போய் சேந்தா... அதொரு சோகம். அதென்னத்துக்கு இப்ப...? இனி அத அந்தப்புள்ள பேரில எழுதி வச்சிடுவ. ஒரு புள்ள, மூணு வயசு போல இருக்கு... அதுவா ஆசப்பட்டு, கலியாணம் கட்டிக்கிறதுன்னாலும் அவங்க அனுபவிக்கணும்.”

குரல் கரகரக்கிறது.

“ஐயா, உங்களுக்கு எத்தினி பெரிய மனசு? பொம்புள பேருக்கு நிலம் யாருமே எழுதறதில்ல. உரிமையோடு இருக்க வேண்டிய நிலத்தக் கூட அவ பேருக்கு எழுதறதில்ல. இத, இந்த பூமி எங்க சின்னம்மாக்குச் சேரவேண்டியதுங்க. அவங்க புருசனும் செத்திட்டான். வாழவே இல்ல. ஒரு பொம்புள புள்ள அவங்கப்பா எங்க பாட்டனே அவ வேற கலியாணம் கட்டிக்கிட்டா, பூமி கைய வுட்டுப் போயிடும்னு எங்கப்பா பேருக்கு எழுதிட்டாரு. இப்ப இந்த பூமி எங்கூட்டுக்காரரு பேருல இருக்கு... எனக்கு லோன் வாங்கணுமின்னா, அவரு சம்மதிக்கணும், கையெழுத்துப் போடணும். பெரியரோட்ல, சைகிள் கடை வச்சிருக்காரு. வெள்ளாமையில் கொஞ்சம்கூட இஸ்டம் இல்ல. ஏங்கசோறு போடுற மண்ணவுட்டுப் போட்டு வேற என்ன தொழிலச் செய்ய?”

அவர் கை மீசையைத் திருகுகிறது. “சபாஷ் உம் பேரன்னம்மா?”

“செவுந்திங்க?”

அவருக்கு மண் பரிசோதனை செய்ய பத்து இடங்களில் இருந்து 'V’ என்ற மாதிரியில் வெட்டி அந்த உட்புற மண்ணைச் சேர்க்கிறாள். பிறகு கூட்டல் குறிபோட்டு எதிரும் புதிருமான பகுதி மண்ணைச் சேர்த்து அதில் கூட்டல் குறியிட்டு கடைசியில் அரை கிலோ மண் வரும் வரையிலும் அதைக் குறைக்கிறாள்.

நேரம் போனதே தெரியவில்லை. கன்னியப்பனுக்கும் மண் பரிசோதனை காட்டியாயிற்று.

வயிறு பசி எடுக்கிறது. ஆனால் மிக உற்சாகமாக இருக்கிறது. உள்ளூர அவள் செய்து கொண்ட உறுதி மேலும் வலிமை பெறுகிறது. நம்பிக்கை ஒளி தெரிகிறது.