பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கோடுகளும் கோலங்களும்

எம்பதுங்கறா. அஞ்சேரு, ஆறேரு வச்சிப் பயிர் பண்ணி, வெள்ளாம எடுக்கறதப்பத்தி நெனக்கவே பயமா இருக்கு. அதுக்கும் ஆள் கிடைக்கல.” அப்பா பரவாயில்லையே என்று செவந்தி நினைத்துக் கொள்கிறாள்.

“இதையேதான் நானும் மாப்பிள்ளையிடம் சொல்லிக் கிட்டிருந்தேன். வெள்ளாமை பண்ணமுடியலைன்னா வித்துக் காசாக்க வேண்டியதுதான? நானே ஒரு விசயம் கேள்விப் பட்டேன். இப்ப கடலூர் புவனகிரி எல்லாம் தோண்டி எண்ணெய் இருக்குன்னு கண்டுபிடிச்சி நிலமெல்லாம். ஏதோ ஒரு வெலக்கி சர்க்கார் ஆர்ச்சிதம் பண்ணிருக்கு. ஏரிக் கரைய சுத்தி இருக்கிற சின்னச் சின்ன கிராமம், குடிசை தரிசெல்லாம் ஒரு சாடிலைட் டவுன்ஷிப்பாக்கிடறதா பிளான் இருக்கிறதா கேள்விப்பட்டேன். இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்னு வேற சொல்லிட்டாங்க. அந்த இடம் வெலைக்கு வந்தா வித்துடறது நல்லது. அம்பதாயிரம் கண்டிப்பா கிடைக்கும். வித்துட்டு வீட்ட நல்லாக் கட்டுங்க. நாங்களும் வந்து இருக்கலாம்...”

பூமி நழுவுவது போல் செவந்தி அதிர்ச்சி அடைகிறாள்.

தோலக் கடிச்சி, துருத்தியக் கடிச்சி, ஆட்டக் கடிச்சி, மாட்டக்கடிச்சி மனிசனையே பதம் பாக்குறீங்களா?

“இத பாருங்க நா அந்தப் பூமில பயிர் வைக்கப் போற! அதெல்லாம் விக்கிய முடியாது! சின்னம்மா பூமி. என் சங்கிலிய சின்னம்மாக்குக் குடுத்தேன். நான் பயிர் வைப்பேன்".

இப்படி ஒர் இடையீட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அப்பா மவுனமாக இருக்கிறார்.

அண்ணன்தான் அதிகாரக் குரலில் அதட்டுகிறான்.

“இதபாரு செவந்தீ உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. வீடு என் உரிமை. அந்த நிலமும் உன் புருசன் பேரில இருக்கு. அதுனால கம்முனு இரு".

செவந்திக்கு ஒர் அரக்கனைக் கட்டிப் போட்டாற் போல் இருக்கிறது.