பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

131

“அவரயில பூச்சி வுழுந்தடிச்சி. அதத்தா நாலு குழம்புல போட்ட. பொறியலுக்குப் பத்தாது. அதுல மாடு வாய் வச்சிடிச்சி. பத்தாத்ததுக்கு சோப்புத் தண்ணியெல்லாம் ஊத்துறீங்க...?” என்று அம்மா சொல்கிறாள்.

“ஆமா, நா சோப்புத் தண்ணிய ஊத்துர. மாட்டே அவத்து வுட்டே. ஏ, நெதியும் மெயின் ரோடுலந்து வராரு. முட்டக் கோசு, தக்காளி, உருளைக்கிழங்கு வாங்கியாரது! நீங்க வாங்கி வந்து நா ஆக்கிப் போடுறது தட்டுக் கெட்டுப் போச்சி!”

“தா, செவுந்தி அநாசியமா என்னிய வம்புக்கிழுக்காத? உங்கண்ணெஈரலு, தொடன்னு வாங்கியாந்தானே? ஆக்கிப் போட்டுக் கழிச்சுட்ட? உனுக்குக் கண்டவங்க கூட ஊர் சுத்தறதும் பேசுறதும், புருச சரியில்லன்னு சொல்லுறதும் சரியாப் போயிடுது...”

“ந்தாங்க! நீங்க மச்சான் ஒறவு புதுசுன்னா வச்சிக்குங்க! மச்சானுக்காகப் புதுசா அதெல்லாமும் சாப்புடக் கத்துட்டிருக்கிறீங்கன்னு நான் கண்டனா?” என்று நொடிக்கிறாள்.

“அட ஏம்பா, இப்படிச் சின்ன புள்ளகளப் போல சண்ட போடுறீங்க? கட்டிக் குடுக்கற வயசில பொண்ணு நிக்கிது. ஒருத்திர ஒருத்தர் அனுசரிச்சிப் போங்கப்பா. செவந்தி சொல்றதும் நாயந்தா. அது என்ன சொல்லுது? இப்ப மூணு மூட்ட எடுக்கற எடத்துல ஒம்பது மூட்ட எடுத்தமே, இது போல்ப் பயிரு செய்யணும்னு ஆசப்படுது. நாயந்தான? நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமில்ல?”

“மாமா, அது மட்டும் பேசாதீங்க இந்த வெவசாயம்லாம் சூது. நெல்லா வெளஞ்சிருக்கும் திடீர்னு மழை கொட்டி நட்டமாப்பூடும். போனவருசம் முத்து நாயக்கர் பண்ணையில, பத்தேக்கரும் மழ பெஞ்சி அறுத்துக்கறதுக்கு முந்தி ஊறி... பல்லு மொளச்சிப் பாழாப் போச்சி. மறுபடி மண்ணச் சரியாக்க அம்பதாயிரம் செலவு பண்ணாரு. நா ஏற்கனவே கடன் வாங்கி, வித்து வேபாரம் பண்ணுற. நெலத்தில இவங்கள நம்பிக் கடன் வாங்க சம்மதிக்க மாட்ட? ஆளவுடுங்க!” அத்துடன் நிற்கவில்லை.