பக்கம்:மருதநில மங்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50புலவர் கா. கோவிந்தன்


பற்கள் அழுந்திய வடு அவன் இதழ்களில் ஆறாமலே காட்சி அளித்தது. அவன் பரத்தையர் சிலரோடு கூடிச் சென்று புனலாடி மகிழ, அது பொறாத வேறு சில பரத்தையர், அவனைச் சினந்து, அவன்மீது வாரி இறைத்த சாதிலிங்கக் குழம்பு, அவன் மார்பில் அவ்வாறே ஒளிவிட்டுக் கிடக்க, அவள் முன்வந்து நின்றான். முன்னர் ஒரு பரத்தை அவனைப் புணர, அவள் அணிந்த மாலைகள் உராய்ந்து உராய்ந்து அவன் மேனியை மெத்தென மென்மையதாக்கப் பின்னர்க் கூடிய பரத்தையின் கூந்தலை, அவன் வாரி முடிக்க, அப்போது, அவள் கூந்தல் மலர் அவன்மீது உதிர்ந்து அழகு செய்ய, அவ் வழகிய தோற்றத்தோட அவள் முன் வந்து நின்றிருந்தான்.

கணவன் கோலத்தைக் காணக் காண, அவள் கலக்கம் அளவிறந்து பெருகிற்று. “ஐய! தகாவொழுக்கம் மேற்கொண்டு தவறு செய்தாய். அதைக் கண்டே நான் வருந்துகிறேன். உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்தி, உனக்கு அறிவுரை கூற வேண்டியவர் அதைச் செய்திலர். மாறாக, அவ் வொழுக்கக் கேட்டிற்கு உற்ற துணையாயும் நிற்கின்றனர். அம்ட்டோ! உன் பரத்தையர் ஒழுக்கம் அறிந்தே வருந்துகிறாள் உன் மனைவி. அவள் முன், இத் தோற்றத்தோடு, சென்று நிற்பது பொருந்தாது. அது அவள் துயரை அதிகமாக்கும். ஆகவே, இக் கோலத்தோடு அவள்பால் செல்லற்க!’ என்று கூறியாவது தடுத்தனரா? இல்லையே! ‘அன்ப! இக் கோலத்தோட சென்று, உன் இதழ்ப் புண்ணையும், மார்பில் சாதிலிங்கக் குழம்பையும், மலர்ப் பொடியையும் உன் மனைவிக்கும் கொண்டு சென்று காட்டு!’ என்று உனக்குக் கூறி, உன்னை இங்கு அனுப்பினவரும் அவர்தாமோ? ஐய! பண்டு நீ அன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/52&oldid=1129482" இலிருந்து மீள்விக்கப்பட்டது