பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


ணம், பல துறைகளிலும் மெய்ம்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையும் போலித்தனமும் இருப்பதைக் கண்டதே யாகும். திருமணம் ஆகி வாழ்க்கையில் ஈடுபட்டதும் மேலும் உலகியலைப் புரிந்து கொள்ள முடிந்தது; மேலும் சிந்தனை ஈடுபாடு வளரலாயிற்று. விழுந்து விழுந்து கடவுளை வணங்குபவர்கள் துன்புறுவதையும் ஐம்பெருங்குற்றங்கள் (பஞ்சமகா பாதகங்கள்) புரிவோர் இன்புற்று வாழ்வதையும் கண்டு வியப்படைந்தேன். இதற்குக் காரணம் பழைய ஊழ்வினை எனக் கூறப்படும் 'நேரப் பேச்சை' (சந்தர்ப்பவாதப் பேச்சைக்) கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் இதன் உண்மைக் காரணத்தை ஆராயத் தொடங்கினேன்.

மூட நம்பிக்கைகள்

பல செயல்கள் காரண காரியத் தொடர்பு இன்றியே மக்களால் செய்யப்படுவதைக் கண்டேன். ஒரு கத்தரிக் காய் செடி போட்டால் கத்தரிக்காய் கிடைக்கிறது ஆனால் கடவுளை வணங்குவதால் நேர்ப்பயன் ஒன்றும் கிடைக்காமையை உணர்ந்தேன். ஒரு சிலரின் வாழ்க்கையில், அவர்கள் கடவுளை வணங்க வணங்க மேன் மேலும் துன்பம் பெருகுவதையும், அவர்கள் அதற்காக அலுப்பு-சலிப்பு அடையாமல் மீண்டும் மீண்டும் கடவுள் வழிபாடு செய்து கொண்டிருப்பதையும் கண்டு வியப்பு எய்தி அதைத் தொடர்ந்து வெறுப்பும் வேதனையும் அடைந்தேன். இவ்வாறு எந்தத் தொடர்பும் இன்றி மூட நம்பிக்கையின் காரணமாகச் செய்யப்படும் பல்வேறு சடங்குகளையும் செயல்களையும் கண்டு - கண்டு அதற்குரிய காரணத்தை மீண்டும் மீண்டும் ஆராயலானேன். ஊழ்வினை-மறுபிறவி - மறு உலகம் - வீடுபேறு (மோட்சம்) என்பன உண்மையில் உண்டா? என்ற ஆராய்ச்சியிலும் காலத்தைச் செலவிட்டேன்.