பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


அரசு முறையின் குறைபாட்டினால், ஆண்டான் - அடிமைகள், உயர்குலத்தார்-கீழ்க்குலத்தார், செல்வர் -வறியவர் என்ற மேடு பள்ளங்கள் மிகுதியாக உருவாயின. மேட்டுக் குடியினர் முற்பிறவியில் நல்வினை செய்தவராகவும் பள்ளப்பகுதியினர் முற்பிறவியல் தீவினை இழைத்தவராகவும் கருதப்பட்டனர். இங்கே ஊழ்வினைக் கொள்கை மிகவும் விளையாடியது. இந்நிலைக்கு இடமின்றி, அரசர்கள் மேடு பள்ளங்களை நிரவி ஆட்சி புரிந்திருந்தால் குடிமக்களுள் சமநிலை ஏற்பட்டிருக்கும். அப்போது ஊழ்வினைக் கொள்கைக்கு இடம் இராதன்றோ? இந்தக் காலத்திலும் எல்லா இடங்களிலும் இன்னும் மேடு பள்ளங்கள் நிரவப்படவில்லை. அந்தப் பணி இப்போதுதான் தொடங்கப்பெற்று மெல்ல மெல்லத் தளர்நடை போடுகிறது.


சூழ்நிலை ஆற்றல் :

அடுத்து மூன்றாவது காரணம், தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்பதாகும். அப்படி என்றால் என்ன? ஒருவர் தெருவழியே போய்க்கொண்டிருக்கிறார்; அவருக்கு முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ ஒரு வண்டி வந்து அவர் மீது மோத அவர் கால் இழந்து போகிறார் அல்லது இறந்தே போகிறார். இதற்கு ஊழ்வினை என ஒன்று காரணமாக இருக்க வேண்டியதில்லை. எதிர்பாராமல் தற்செயலாய் ஏற்பட்ட அந்த நேரச் சூழ்நிலையின் வன்மையே அவரது முடிவுக்குக் காரணமாகும். இந்நிகழ்ச்சியோடு ஊழ்வினை என ஒன்றைக் கொண்டு வந்து முடிச்சு போடத் தேவையே இல்லை. “தற்செயலான சூழ்நிலை ஆற்றல்’ என்றால் இப்போது விளங்கலாம். முற்கூறிய சமூகச் சீர்கேடு, அரசு முறையின் குறை என்னும் இரண்டு காரணங்களையும்கூட இந்தச் சூழ்நிலை ஆற்றல்’ என்னும் காரணத்துள் அடக்கிவிடலாம். அவர் வண்டியில் அகப்பட்டு முப்பத்