பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


ஐம்பொருள் வழிபாடு

இச்செய்திகள் எல்லாம் மக்களிடையே எப்படி கடவுள் பற்றிய உணர்வு ஏற்பட்டது என்பதை விளக்கு வதற்கு உரிய தக்க சான்றுகள் ஆகும். பண்டைக்கால மக்கள் இம்மட்டில் நின்றார்களா? ஐந்து மூல முதற் பொருள்களையும் மேற்கூறியவாறே வழிபடலாயினர். இம்முதற் பொருள்களை மக்கள் வழிபட்டதன் நோக்கம் மூன்று எனக் கூறலாம்: தம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதம்மால் கட்டுப்படுத்த முடியாத பொருள்களாக இவை இருப்பதனால் ஏற்பட்ட மதிப்பின் காரணமாக வழிபடுவது முதல் நோக்கம்; இரண்டாவது: இப்பொருள்களால் அடையும் நன்மைகள் காரணமாக ஏற்பட்ட நன்றியுணர்வு; மூன்றாவது: இப் பொருள்களினால் சில நேரத்தில் ஏற்படும் பேரழிவுக்கும் பேரிழப்புக்கும் அஞ்சி நடுங்கி, இனியும் அவை நேராதிருக்கச் செய்ய வேண்டும் என நயந்து கெஞ்சி வேண்டி விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.


மழை எவ்வாறு தோன்றுகிறது என்பதை அறியா மையாலும் அது விண்ணிலிருந்து கீழே வருவதாலும் விண்ணே மழையைத் தருகிறது என எண்ணி அதற்கு நன்றி பாராட்டும் வகையிலும், அளவுக்கு மிஞ்சி மழை யைக் கொட்டி அழிவு செய்யலாகாது என வேண்டு கோள் விடுக்கும் வகையிலும் விண்’ என்னும் மூலமுதற் பொருளை மக்கள் வழிபட்டனர். அவ்விண்ணைப் பெண் ணாக உருவகித்து ஆகாய வாணி’ (வான மங்கை) எனப் பெயரும் தந்தனர். இப்பெயர் இப்போது இந்தியாவின் வானொலி அமைப்பின் பெயராக (ஆகாஷ் வாணி என) வழங்கப்படுகிறது.

அடுத்து,-அளவான காற்றால் நன்மையும் அளவு மீறிய புயல் காற்றால் தீமையும் விளைகின்றன.