பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கோடுகளும் கோலங்களும்

கன்னியப்பன் இப்போதெல்லாம் முழுப் பொறுப்பும் எடுத்துக் கொள்வதில்லை. முழுநிலமும் உழ நாலைந்து ஏர் தேவைப்படுகிறது. உழவு காலங்களில் அப்பன் சும்மா இருக்க மாட்டார். ஆனால் அவரை முழுசும் நம்பவும் முடியவில்லை.

“கன்னிப்பா, ஏம்பா கால வாரிவுடறே! ஒரே நாள்ல முடிக்கணும் கூட ரெண்டாளக் கூட்டிட்டு வான்னா, இப்படிக் கால வாரி வுடுற?” என்று செவந்தி சத்தம் போடுகிறாள்.

“ஆளே இல்லக்கா... நா, நீங்க மக்யாநாள் வச்சிட்டாவரத் தோதுப்படும். நாளக்கி எனக்கு வேல இருக்கு. வர்றதுக்கில்ல.”

“அப்ப வேற ஆளும் கொண்டாந்து விடமாட்ட? அப்பா இருந்தா ஒரு ஏருக்கு அவர நம்பலாம். மூணு நாளா உடம்பு சரியில்ல...”

“ஆமா... கையில் காசு வேணும்னு, வண்டியடிக்கிறாரு, காசு எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்.”

“சரி. சரி... போ... நானே சமாளிச்சிக்கறே!”

அவள் அதிகாலையில் எழுந்து சாணம் அள்ளவந்தபோது திகைக்கிறாள். மாடுகள் இல்லை; ஏரும் இல்லை.

உள்ளே ஓடிவந்து கட்டிலில் பார்க்கிறாள். அப்பன் குறட்டை இழுப்பு கேரு கேரென்று வாசல் வரை கேட்கிறது. வாசலில் புருசன் இல்லை.

மனசுக்குள் ஒரு குறளியாக...

விடுவிடென்று வாசல் கதவைச் சாத்திக் கொண்டு ஒடுகிறாள். அவள் கண்களால் தன்னையே நம்ப முடியவில்லை.

ஐந்து ஏர் ... தண்ணிர் பாய்ந்து, தொழுஉரம் போட்ட வயலில் உழுகின்றன. கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். கன்னியப்பன் , வேல்ச்சாமி, பழனியாண்டி, மாரி ...பிறகு அந்த அகலமான முதுகுடன் உயரமான ஆள்... வரப்படியில் அருகில் நிற்கிறாள். தார்ப்பாய்ச்சிய வேட்டி.