பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

கோடுகளும் கோலங்களும்

தைப் பொங்கல் கழிந்து மாசி மாசத்தில் ஒர் அந்தி நேரம்... கோயில் முகப்பில், தோளில் தொங்கிய மூட்டையுடன் கோயில் சாமியார் வந்து உட்காருகிறார். அப்போது கோயில் கமிட்டிக்காரர்கள் அங்கிருக்கிறார்கள். சொந்தமான சாமியாரைக் கண்ட சந்தோசம் ரங்கனுக்குப் பிடிபடவில்லை, வீட்டுக்கு ஓடி வருகிறான்.

“செவந்தி... நம்ம ஊருக்கு நல்ல காலம் பிறந்திட்டது”

“எனக்கு உடம்பு புல்லரிச்சி போச்சி. அந்தப் போலிச்சாமி, என்ன திமிரில சாமி ஜல சமாதியாயிட்டாருன்னு சொன்னா!... பச்சில மூட்ட தொங்குது. அதே முகம். தாடி முடி அதே மாதிரி இருக்கு. வந்திட்டாங்க. ‘சாமி உங்கள நினைக்காத நாளில்ல.. இந்த அம்மாதா உங்கள இப்பக் கொண்டு விட்டான்'னு சொல்லி அப்படியே வுழுந்தே. வாங்க போய்க் கும்புட்டு வரலாம். அப்பா எங்கே?”

“சரோ கதவடச்சி உள்ள போட்டிருக்கு.”

“அவுரயும் கூட்டிட்டுப் போவோம் வா....”

செவந்திக்கு ஆறுதலாக இருக்கிறது.

வீட்டிலுள்ள அனைவருமே, சாமியைக் கண்டு வணங்கப் புறப்பட்டு விடுகிறார்கள். அம்மா மட்டும் வீட்டில் இல்லை.

கதவைப் பூட்டிக் கொண்டு சரோ, சரவணன் செவந்தி ரங்கன் அப்பா எல்லாரும் முகம் தெரியாத இருட்டில் செல்வதை சுந்தரி பார்க்கிறாள். “கோயிலுக்குப்போறம்...” என்று சுருக்கமாகச் செவந்தி தெரிவிக்கிறாள்.

கோயிலின் முன்மண்டபம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வாயிலிலேயே பெரிய வாழைத்தண்டு விளக்குகள் சாமியார் வந்து விட்டார் என்று வந்திருக்கும் சிலரை இனம் காட்டுகிறது. வரதராஜன், சிவலிங்கம், நாச்சப்பன் இவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சாமியார் கிணற்றடியில் நீரிறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

“நிறையப் பச்சிலைக் கொண்டாந்து இந்நேரம் அங்கே வச்சிட்டிருந்தாரு" என்று பூசாரி தெரிவிக்கிறான்.